அலிகார்
ஹத்ராஸ் பலாத்காரத்தில் சோதனை மாதிரிகள் 11 நாட்களுக்குப் பிறகு எடுக்கப்பட்டதால் ஆய்வில் ஏதும் தெரியாது என மருத்துவ நிபுணர் கூறி உள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி 19 வயதான தலித் பெண் ஒருவர் நான்கு உயர்சாதியைச் சேர்ந்தோரால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக தாக்கபதடார். அவரை மருத்துவமனையில் அனுமதித்த பிறகு தன்னை பலாத்காரம் செய்த நால்வர் குறித்த அடையாளங்களைச் செப்டம்பர் 22 ஆம் தேதி ஒரு நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் அளித்தார்.
அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பலாத்காரம் குறித்த முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது. அதன் பிறகு அவரிடம் இருந்து சோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை நிலையத்துக்குச் செப்டம்பர் 22 ஆம் தேதி அதாவது 11 நாட்கள் கழித்து அளிக்கப்பட்டது இந்த மாதிரிகளைச் சோதனை செய்த அறிக்கையின் அடிப்படையில் அந்தப் பெண் பலாத்காரம் செய்யப்படவில்லை எனக் காவல் துறை அறிவித்தது.
சட்டம் ஒழுங்கு காவல் துறை துணை இயக்குநர் பிரசாந்த் குமார், “பரிசோதனையின்படி அந்த பெண்ணின் உறுப்புக்களில் விந்து மற்றும் விந்துக் கறைகள் இல்லை. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் மரணத்துக்குக் காரணம் தாக்குதல் தான் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகளின் அறிவிப்புக்கு மாறாமல் ஊடகங்களில் தவறான தகவல்கள் உலவி வருகின்றன” எனத் தெரிவித்தார்.
இந்த சோதனையை நடத்திய அலிகார் இஸ்லாமிய பலகலைக்கழகத்தைச் சேர்ந்த ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவக் கல்லூரி நிபுணர் ஃபைஸ் அகமது இது குறித்து கருத்து தெரிவித்து அரசுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் பரிசோதனை அறிக்கை குறித்த இறுதிக் கருத்து எனக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர், “பலாத்காரம் குறித்து 11 நாட்களுக்குப் பிறகு எவ்வாறு சோதனை செய்து கண்டறிய முடியும்? அந்த மாதிரிகள், தலைமுடி, உடைகள், நகக்கண், அந்தரங்க உறுப்புக்கள் போன்றவற்றில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. அதில் விந்து எதையும் கண்டறிய முடியாது. சிறுநீர், மலம், மற்றும் மாதவிடாய் போன்றவற்றால் அவை நீக்கப்படலாம். அரசு வழிகாட்டுதலின்படி மாதிரிகள் நான்கு நாட்களுக்குள் எடுக்கப்பட்டு சோதனை இட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.