யானைகள் தந்ததுக்காக தொடர்ந்து வேட்டையாடப்படுவதாலும், தந்தங்கள் பிடுங்கப்படுவதாலும் ஏற்பட்ட மரபணு மாற்றத்தால் ஆப்ரிக்காவில் தற்பொழுது பிறக்கும் யானைக்குட்டிகள் தந்தமின்றி பிறப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது.

elephants

ஆப்ரிக்காவின் சில பகுதிகளில் 98% பெண் யானைகள் தந்தமின்றி வாழ்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த பத்து ஆண்டுகளாக ஆப்ரிக்காவில் மூன்றில் ஒரு யானை வேட்டையாடப்படுவதாக தெரிகிறது. யானை தந்தத்துக்கு சீன சந்தையில் கிடைக்கும் வரவேற்பு உலகின் பல பகுதிகளிலும் யானைகள் வேட்டையாடப்படுவதற்கு காரணம் ஆகும்.
2007 முதல் 2014-ஆம் ஆண்டுக்குள் சுமார் 144,000 யானைகள் தந்தத்துக்காக கொல்லப்பட்டதாக தெரிகிறது. “யானையின் குரல்” என்ற தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஜோய்ஸ் பூலே என்ற ஆய்வாளார் கடந்த 30 ஆண்டுகளாக யானைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். யானைகள் தந்தத்துக்காக தொடர்ந்து கொல்லப்படுவதால் ஏற்பட்ட மரபியல் மாற்றத்தால் யானைகள் தந்தமின்றி பிறந்து வருவதாக குறிப்பிடுகிறார்.
மொசாம்பிக்கில் உள்ள கொரன்கோசா தேசிய பூங்காவில் இருந்த 90% யானைகள் 1977 மற்றும் 1992-இல் நடந்த உள்நாட்டு போரின்போது தந்தத்துக்காக கொல்லப்பட்டதாக சொல்லும் ஜோய்ஸ் பூலே, இதன் விளைவாக 35 வயதுக்கு மேற்பட்ட பல பெண் யானைகள் தந்தமின்றி அலைந்து வருவதாக கூறுகிறார். தற்போழுது நிலமை கட்டுக்குள் வந்துவிட்டாலும் அங்கு இப்போது பிறக்கும் யானைக் குட்டிகள் தந்தமின்றியே பிறந்து வருவதாக குறிப்பிடுகிறார்.
யானைகள் தந்தமின்றி பிறப்பதால் அவை வேட்டையாடுவது குறையக்கூடும், அவற்றின் இனம் அழியாது என்ற ஒரு பார்வை இருந்தாலும் யானைகள் தந்தமின்றி பிறப்பது ஊனம் ஆகும். தந்தங்கள் யானைகளுக்கு பல விதத்திலும் உதவக்கூடியவை. தந்தமில்லாத யானைகள் ஊனமானவையாகவே கொள்ளப்படும் என்று உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.