காபூல்:

காபூலில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருக்கலாம் என்று எழுந்துள்ள புகாரை தொடர்ந்து அந்நாட்டுடனான டி20 உள்ளிட்ட கிரிக்கெட் போட்டிகளை ஆப்கன் கிரிக்கெட் வாரியம் ரத்து செய்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்த லாரி வெடிகுண்டு தாக்குதலில் 90 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இது வரை பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலில் தலிபான்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற குற்றச்சாட்டை அந்த இயக்கம் மறுத்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவத்துடன் முன்பு தொடர்பில் இருந்த தலிபான்களின் மற்றும் அதன் துணை அமைப்பான ஹக்கானி ஆதரவாளர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று ஆப்கன் நுண்ணறிவு முகமைகள் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடனான டி20, நட்பு போட்டிகள் உள்பட அனைத்து விதமாக கிரிக்கெட் போட்டிகளையும் ரத்து செய்து ஆப்கன் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

டி 20 போட்டிகள் வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் காபூலில் நடக்க இருந்தது. தொடர்ந்து பாகிஸ்தான்&ஆப்கன் இடையே தொடர் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்தது.
‘‘பயங்கரவாதம் குடியமர்ந்துள்ள ஒரு நாட்டுடன் நட்பு போட்டிகள் மற்றும் பரஸ்பரமான போட்டிகள் நடப்பது குறித்த ஒப்பந்தம் இருப்பது சாத்தியமில்லை’’ என்று கிரிக்கெட் வாரியம் தனது பேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளது.

ஆப்கன் கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கடந்த 2008ம் ஆண்டு இந்தியாவில் மும்பையில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடனான போட்டிகளில் இந்திய அணி விளையாடுவது கிடையாது. அதேபோல் பங்களாதேஷ் அணியும் பாகிஸ்தான் அணியுடனான போட்டிகளை புறக்கணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.