பெற்றோரைக் கொன்ற தாலிபான்களைச் சுட்டு வீழ்த்திய சிறுமி..

பல சினிமாக்களின் ‘கிளைமாக்ஸில்’  நாம் பார்க்கும் திகில் காட்சி ஒன்று ஆப்கானிஸ்தான் நாட்டில் நிஜமாகவே அரங்கேறியுள்ளது.

அந்த தேசத்தில் தாலிபன் பயங்கரவாதிகள், போட்டி அரசாங்கம் நடத்தி வருவது உலகறிந்த செய்தி.

அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயல்படும் எவரையும் அவர்கள் உயிருடன் விட்டு வைப்பதில்லை.

அங்குள்ள ஷோர் மாகாணத்தில் உள்ள ஊர் பஞ்சாயத்துத் தலைவர், அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளார்.

அங்கு வந்த தாலிபன் தீவிரவாதிகள், அந்த பஞ்சாயத்துத் தலைவரை வீட்டுக்கு வெளியே இழுத்து வந்து உதைத்துள்ளனர். அவரது மனைவி கணவனைக் காப்பாற்ற ஓடி வந்துள்ளார்.

‘’என் கணவனை ஒன்றும் செய்து விடாதீர்கள்’’ என்று கெஞ்சியுள்ளார்.

இரக்கமற்ற தீவிரவாதிகள், கணவனையும், மனைவியையும் அவர்கள் வீட்டு முன்பாகவே சுட்டுக்கொன்றுள்ளனர்.

அப்போது அவர்களின்  14 வயது மகள் உமர் கல் வீட்டினுள் இருந்துள்ளார். தன் கண் முன்னே , பெற்றோர் கொல்லப்பட்டதைக் கண்டு, ஆவேசமானாள். தங்கள் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ’ஏ.கே.47 ‘ ரகத் துப்பாக்கியை எடுத்து, தனது தந்தையைக் கொன்ற இரண்டு தாலிபன் தீவிரவாதிகளைக் குறி பார்த்துச் சுட்டுத் தள்ளினார்.

 இருவருமே வீட்டில் முன்னே சுருண்டு விழுந்து இறந்து போனார்கள்.

பின்னர் , உடன் வந்த தீவிரவாதிகளையும் சரமாரியாகச் சுட ஆரம்பித்தாள்.

காயம் அடைந்த அந்த தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்த தகவல் அறிந்து, தீவிரவாதிகள் பெரும் படையோடு, உமர் கல்லைப் பழி தீர்க்க வருவார்கள் என்பது கிராமத்து ஆட்களுக்குத் தெரியும்.

இதனால் சிறுமி உமர் கல்லையும்,அவளது தம்பியையும் ஊர் மக்கள், பத்திரமான இடத்துக்குக் கொண்டு சென்று பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

அவர்கள் நினைத்தது போல், கொஞ்ச நேரம் கழித்து தாலிபன்கள், பயங்கர ஆயுதங்களுடன், அந்த வீட்டுக்கு வந்துள்ளனர்.

அவர் வீட்டில் இல்லாததால், ஊர் முழுக்க உமர் கல்லைச்  சல்லடை போட்டுத் தேடிப் பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பினர்.

-பா.பாரதி.