அபுதாபி: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளுக்கு 545 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட்டில் ஜிம்பாப்வே வென்று முன்னிலை வகிக்கிறது. தற்போது கடைசி டெஸ்ட் நடைபெற்று வருகிறது.

அபுதாபி ஆடுகளம், பந்துவீச்சிற்கு சற்றும் ஒத்துழைக்காத வகையில் தட்டையாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வுசெய்த ஆப்கானிஸ்தான் அணி, அடித்து துவைத்துவிட்டது.

அந்த அணியின் ஷகிதி 200 ரன்களை வெளுத்தார். அஷ்கார் ஆப்கன் 164 ரன்களை விளாசினார். இப்ராகிம் ஸர்தான் 72 ரன்களையும், நசிர் ஜமால் 55 ரன்களையும் அடித்தனர். இதனால், வெறும் 4 விக்கெட்டுகள் மட்டும் இழந்து 545 ரன்கள் எடுத்திருந்த அந்த அணி டிக்ளேர் செய்தது.

பின்னர், இரண்டாம் நாளின் இறுதிப் பகுதியில், தனது முதல் இன்னிங்ஸை துவக்கிய ஜிம்பாப்வே அணி, விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை சேர்த்துள்ளது. இன்னும் 3 நாட்கள் மீதமிருக்கும் நிலையில், இந்த தட்டை ஆடுகளத்தில் ஆட்டம் டிரா ஆகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.