சென்னை: பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
கோரோனா தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடத்தவது குறித்து நிதானமான முடிவெடுத்து வருகிறோம். மாணவர்களின் நலன் முக்கியம் என்பதால், என்ன தான் மிக பாதுகாப்போடு தேர்வை நடத்தினாலும் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. மாணவர்களின் எதிர்காலம் என்பதால் மிக கவனத்துடன் முடிவு எடுக்க உள்ளோம் என்று கூறினார்.
மேலும், மற்ற வகுப்புகளுக்கு தேர்ச்சி கொடுப்பதில், முன்பு நடந்த தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்குவதா அல்லது இன்டர்ணல் மதிப்பெண்கள் அடிப்படையில் முடிவுகளை வழங்குவதா? என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றும் தெரிவித்தார். மாநிலங்களில் எடுத்த முடிவின் அடிப்படையில் மதிப்பெண் கொடுக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளோம். இன்று நடத்தப்பட்ட ஆலோசனை முடிவுகளை முதல்வரிடம் தெரிவித்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
நீட் தேர்வு குறித்து இதுவரை பேச்சு ஏதும் தொடங்கவில்லை என்று கூறியளவர், பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்துவோம் என்றும், நகரப் பகுதிகளில் இருக்கும் ஆசிரியர்கள் ஊரகப் பகுதிகளிலிருக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுப்பது குறித்தும் பள்ளி கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்தும் அக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தியதாகவும் கூறினார்.