டில்லி
சிகப்பழகு கிரீம் போன்ற தவறான தகவல் தரும் விளம்பரம் செய்தால் 5 வருடச் சிறைத் தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் அளிக்க அரசு சட்டத் திருத்த மசோதா வடிவமைத்துள்ளது
செய்தி ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வரும் பல விளம்பரங்கள் தவறான தகவலை அளித்து வருவதாக நுகர்வோர் புகார் அளித்து வருகின்றனர். இவற்றில் பெரும்பாலானவை சிகப்பழகு அளிக்கும் கிரீம், மற்றும் பாலியல் திறனை வலுவாக்கும் மருந்துகள், மூளைத் திறனை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள் ஆகியவை குறித்து உள்ளன.
இதைக் கருத்தில் கொண்டு இவ்வாறு தவறான தகவல் விளம்பரங்களை அளிப்போருக்கு கடும் தண்டனை கொடுக்கும் வகையில் சட்டத்தை மாற்ற அரசு முடிவு செய்தது. அதையொட்டி ஏற்கனவே உள்ள தவறான தகவல் விளம்பரத் தடுப்பு சட்டம் 1954 இல் திருத்தங்கள் செய்து ஒரு வரைவு மசோதா வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வரைவு மசோதாவில், பல புதிய நோய்கள், குறைபாடுகள் போன்றவை சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு 78 நோய்கள் மற்றும் குறைபாடுகள் பட்டியல் இடப்பட்டுள்ளன. இவற்றுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும் என விளம்பரம் செய்வது குற்றம் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள சட்டத்தில் 54 நோய்கள் மட்டும் குறைபாடுகள் இருந்தன.
புதியதாக சேர்க்க்ப்பட்டவைகளில் முக்கியமானவை சிகப்பழகு கிரீம்கள், வயதாவதைத் தடுக்கும் அழகு சாதனங்கள், எய்ட்ஸ், நினைவுத் திறன் அதிகரிப்பு, சிறார் மற்றும் பெரியோரின் உயரம் அதிகரிப்பு, பாலியல் உறுப்புகள் வளர்ச்சி, உடல் உறவு நேரம் நீட்டிப்பு உள்ளிட்டவற்றுக்கான மருந்துகள் ஆகியவை ஆகும்.
இந்த மசோதாவின் ஏழாம் விதிப்படி முதல் முறை தவறு செய்வோருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை மற்றும் சிறு தொகை அபராதம் எனவும் மீண்டும் தவறு செய்வோருக்கு சிறை தண்டனை 5 வருடம் வரையும் ரு. 50 லட்சம் வரை அபராதமும் அதிகரிக்கப்படும் என உள்ளது. இந்த விளம்பரங்கள் இணையம், பிட் நோட்டிசுகள், சுற்றறிக்கை, பதாகைகள், சுவரொட்டிகள் போன்ற எவ்வகையில் இருந்தாலும் தண்டனை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரைவு மசோதாவுக்குப் பொதுமக்களின் ஆலோசனை, விமர்சனம் மற்றும் எதிர்ப்புக்களைத் தெரிவிக்க 45 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை உள்ளிட்டவற்றை drugsdivmohfw@gov.in என்ற முகவரிக்கு இ மெயில் மூலமாகவோ அல்லது Under Secretary (Drugs Regulation), Ministry of Health and Family Welfare, Room No. 414A, D Wing, Nirman Bhawan, New Delhi – 110011 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அனுப்பலாம் என அமைச்சகம் அறிவித்துள்ளது.