திருப்பதி லட்டு கலப்பட நெய்யில் செய்யப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இந்துக்களின் மனது புண்படும்படியான இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
கடந்த ஆட்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு நெய் சப்ளை செய்ய போடப்பட்ட ஒப்பந்தத்தில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாகவும் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட நெய்யை குறைவான விலைக்கு வாங்கியதாகவும் சந்திரபாபு குற்றம் சாட்டியுள்ளார்.
திருப்பதியில் லட்டு செய்வது உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டிற்காக நாளொன்றுக்கு சுமார் 300 முதல் 500 லிட்டர் நெய் வாங்கப்படுகிறது.
பல ஆண்டுகளாக திருப்பதி லட்டுக்கு சுவை சேர்த்து வந்த கர்நாடக மாநில பால் உற்பத்தி சங்கமான ‘நந்தினி’ நெய் விலை அதிகம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டது.
6 மாதங்களுக்கு ஒருமுறை டெண்டர்கள் மூலம் மின் கொள்முதல் மூலம் திருப்பதி தேவஸ்தானம் (TTD) நெய்யை கொள்முதல் செய்து வருகிறது.
நெய்யின் தரத்தை பரிசோதிக்க திருமலையில் ஒரு ஆய்வகமும் உள்ளது.
2021ம் ஆண்டு மார்ச் மாதம் விடப்பட்ட டெண்டரில் நந்தினி நிறுவனத்தை விட உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த பிரீமியர் மற்றும் டெல்லியைச் சேர்ந்த ஆல்பா ஆகிய நிறுவனங்கள் முறையே எல்-1 மற்றும் எல்-2 தரத்திலான நெய்யை குறைந்த விலையில் சப்ளை செய்ய டெண்டர் கோரியிருந்தன.
அதே நேரத்தில் எல்-3 ரக நெய்யை நந்தினி நிறுவனம் தொடர்ந்து சப்ளை செய்து வந்தது.
இந்த நிலையில் 2023 ஜூலை மாதம் முதல் விலை உயர்வு காரணமாக நந்தினி நிறுவனத்திடம் இருந்து நெய் கொள்முதல் செய்வது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
இந்த விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் தலையீடே காரணம் என்றும் குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட நெய் கலப்படம் செய்யப்பட்டது என்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை தற்போது கூறியுள்ளார்.
திருமலையில் உள்ள ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளைத் தாண்டி, அதுவும் விலங்குகளின் கொழுப்பில் இருந்து எடுக்கப்படும் கலப்பட நெய்யைப் பயன்படுத்துவது பக்தர்களை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பொதுவாக நெய்யில் கலப்படம் செய்ய சோயா பீன், சூரியகாந்தி, ஆலிவ், ராப்சீட், ஆளி விதை, கோதுமை கிருமி, சோளக் கிருமி, பருத்தி விதை, தேங்காய், பனை கர்னல் கொழுப்பு, பாமாயில், மீன் எண்ணெய், மாட்டிறைச்சி கொழுப்பு மற்றும் பன்றிக்கொழுப்பு உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தக் கூடும்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இந்த குற்றச்சாட்டை அடுத்து திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு அதிலும் குறிப்பாக மாட்டிறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய் போன்றவை கலக்கப்பட்டதாக பரவிய தகவலை அடுத்து நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
தவிர, புரட்டாசி மாதம் காரணமாக பிரமோற்சவத்துக்காக திருப்பதியில் கூடிய லட்சக்கணக்கான பக்தர்கள் இதனால் பெரிதும் கலக்கமடைந்தனர்.
இந்த நிலையில், திருப்பதி பாலாஜி மீது பக்தர்கள் எந்தளவிற்கு பக்தி வைத்துள்ளனரோ அதே அளவுக்கு லட்டு பிரசாதத்தையும் அவர்கள் புனிதமாக கருதுகிறார்கள்.
சந்திரபாபு நாயுடுவின் இந்த கருத்து அரசியல் ரீதியானது என்றும் லட்டு பிரசாதம் குறித்த அவரது பேச்சு கண்டிக்கத் தக்கது, இதை நிரூபிக்க முதல்வர் தாயாரா என்று ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் கட்சியைச் சேர்ந்த TTD முன்னாள் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஒய்வி சுப்பாரெட்டி சவால் விடுத்துள்ளார்.
தவிர, ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவரும் சந்திரபாபு நாயுடுவின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், திருமலையை இழிவுபடுத்தவும், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தவும், தெலுங்கு தேசம் கட்சியும், ஒய்சிபியும் கேவலமான அரசியல் செய்வதாக அவர் குற்றம் சாட்டினார்.
சந்திரபாபு நாயுடு கூறியது திருமலையின் புனிதத்திற்கும் நற்பெயருக்கும் கேடு விளைவிக்கும். இதில் உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
திருப்பதி லட்டுக்கு 50 ஆண்டுகளாக சுவையும் மணமும் சேர்த்த கர்நாடக நெய்யை கை கழுவியது தேவஸ்தானம்