சென்னை
சசிகலா சிறையில் இருந்து வெளி வந்த பிறகு அதிமுக அவருடைய தலைமையின் கீழ் சென்று விடும் என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். இவர் தற்போது தமிழகத்தில் சிவகங்கை மக்களவை தொகுதியின் உறுப்பினராக உள்ளார். இவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நேற்று கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது கார்த்தி சிதம்பரம், “நிச்சயம் சசிகலா சிறைவாசம் முடிந்து திரும்பி வருவார். என்னுடைய ஊகத்தின்படி அவர் திரும்பி வந்தவுடன் அதிமுக மற்றும் அமமுகவை இணைத்து விடுவார். எனது அரசியல் ஆய்வின் அடிப்படையில் சொல்கிறேன். எனது விருப்பம் என யாரும் எழுதி விட வேண்டாம்.
இவ்வாறு இரு கட்சிகளும் இணைந்த பிறகு ஒட்டு மொத்த கட்சி தலைமையும் சசிகலாவின் கீழ் வந்து விடும். சசிகலா கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் வரை தனது ஆட்களை நியமித்துள்ளார். ஆகவே அவர் எவ்வித சிரமமும் இன்றி இரு கட்சிகளையும் தினகரனையும் அதிமுகவில் இணைத்து விட்டு தலைவராகி விடுவார். ஆயினும் வரும் தேர்தலில் அதிமுக தோல்வி அடையும்” எனக் கூறி உள்ளார்.