சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் இனி பொதுக் கூட்டங்கள் நடத்த நிர்வாகிகள் அனுமதி பெற வேண்டும் என கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார்.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கினார். அதுகுறித்து, விஜய் நேரடியாகத் தெரிவிக்காமல், அறிக்கை வாயிலாக அதன் அறிவிப்பு வந்தது. பிறகு, ஆகஸ்ட் 22ஆம் தேதி, கட்சியின் கொடி மற்றும் பாடல் வெளியிடப்பட்டது. இரு நிகழ்வுகளுக்கும் இடையே, விஜய் தன் அரசியல் கொள்கை, நிலைப்பாடு குறித்து நேரடியாக ஊடகங்களிடம் பேசவில்லை. எ இந்தப் பின்னணியில்தான், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அறிவிக்கப்பட்டது. அதன்படி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியின் வி.சாலையில் நவம்பர் 27ந்தேதி மாலை மணிக்கு அக்கட்சியின் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் கூட்டணி ஆட்சி என பல்வேறு கருத்துக்களை பேசி, தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து, டிசம்பர் 6ந்தேதி நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டபோது, திமுகவின் வாரிசு அரசியலை, மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என நேரடியாக பேசி மேலும் பரபரப்பை உருவாக்கினார்.
இந்த நிலையில், தவெகவினர் இனி பொதுக்கூட்டங்கள் நடத்த கட்சி நிர்வாகிகளின் அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்ட நிர்வாகிகள், தலைவர்கள், அணித் தலைவர்களின் கவனத்திற்கு, தமிழக வெற்றிக் கழகத்தி்ன தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி இனி வரும் காலங்களில் தங்கள் மாவட்டத்தில் நடத்தப்படும் ஆலோசனைக் கூட்டங்கள் பொதுக் கூட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் போன்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் கீழ்க்கண்ட வழிமுறைகள் கடைப்பிடிக்க வேண்டும்.
முதலாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து, இரண்டாவதாக கொள்கைப்பாடல், மூன்றாவதாக உறுதிமொழி அதனை தொடர்ந்து தாங்கள் திட்டமிட்ட நிகழ்ச்சிகள். நிகழ்ச்சி நிறைவில் கழக கொடிப் பாடல் என மேற்சொன்ன அடிப்படையில் அனைத்தையும் பின்பற்ற வேண்டும். மேலும் தங்கள் மாவட்டம் சார்பில் நடத்தப்படும் ஆலோசனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் செய்தியாளர் சந்திப்பு ஆகியவை கட்சி தலைமையிடம் அனுமதி பெற்ற பின்பே நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.