ஹிரோஷிமா
ஜப்பான் நாட்டில் நடைபெறும் ஜி 7 மாநாட்டில் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரில் ஜி 7 கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு மே 19 – 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள இந்தியா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன், ஜெர்மனி உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் ஜப்பான் சென்றுள்ளனர்.
இதில் முதல் நிகழ்வாக, ஹிரோஷிமாவில் உள்ள நினைவரங்க பூங்காவில் உலக நாடுகளின் தலைவர்களை ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா வரவேற்றார். பிறகு இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா வீசிய அணுகுண்டால் பெரும் பேரழிவைச் சந்தித்த மக்களின் நினைவாக ஹிரோஷிமாவில் உள்ள நினைவரங்கில் உலக நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்த ஜி 7 உச்சி மாநாட்டில், முக்கிய நிகழ்வாக வரும் ஞாயிற்றுக்கிழமை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேரடியாக கலந்து கொள்கிறார் என்பதை உக்ரைன் அரசு உறுதிப்படுத்தியுள்ளது. இதில் ஜெலன்ஸ்கி கலந்து கொள்வதன் மூலம், ஜி 7 உச்சி மாநாட்டில் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.