மும்பை:

கடலூர் மற்றும் நாகபட்டினம் மாவட்டங்களில் 40 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைத்து ஆய்வு செய்வதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.


தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் மீண்டும் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் தாய் நிறுவனமான வேதாந்தா 247 ஹட்ரோகார்பன் கிணறுகளையும், பொதுத் துறை நிறுவனமான ஓஎன்ஜிசி 67 எண்ணெய் கிணறுகளையும் டெல்டா மாவட்டங்களில் அமைக்க அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தன.

அதில் ஓஎன்ஜிசி நிறுவனம் 40 இடங்களில் ஆய்வுகள் செய்து அறிக்கை சமர்ப்பிக்க சுற்றுச்சூழல் அமைச்சகம் தற்போது அனுமதியளித்துள்ளது.

ஏற்கெனவே, நெடுவாசல் உள்ளிட்ட இடங்களில் ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஈத்தேன் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை எடுக்க மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போது அளிக்கப்பட்டுள்ள அனுமதியின் கீழ் ஒர் இடத்தில் ஹைட்ரோகார்பன் உள்ளது என கண்டறியப்பட்டால், அங்குள்ள அனைத்து இயற்கை வளங்களையும் எடுத்துக்கொள்ள முடியும்.

அதன் மூலம் கிடைக்கும் வருவாயை அரசுடன் பகிர்ந்துகொண்டால் போதும் என 2017-ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, ஏப்ரல் மாதம் 14-ம் தேதி 27 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க, ஆய்வு செய்ய அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது கூடுதலாக 40 ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்கு ஆய்வு செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முடிந்த நிலையில், மேலும் 40 ஹைட்ரோகார்பன் கிணறுகள் ஆய்வு செய்ய அனுமதியளிக்கப்பட்டிருப்பது, தொடர்ந்து போராடி வரும் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.