இந்தியாவில் இருந்து விமானங்கள் பிரிட்டன் வருவதற்கு தடை போடுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன் லண்டன் சென்று சேர்ந்த மிகப்பெரும் பணக்காரர்களில் சீரம் நிறுவனத்தின் அதார் பூனாவாலாவும் ஒருவர். சீரம் நிறுவனம் இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் இந்தியாவின் முக்கிய கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்களிடம் இருந்து தனக்கு மிரட்டல்கள் வருவதால், சில காலம் நான் இங்கிலாந்திலேயே தங்கி இருந்து தடுப்பூசி தயாரிக்கும் பணியை மேற்கொள்ள இருக்கிறேன் என்று டைம்ஸ் நாளிதழுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.

வாரம் ஒன்றுக்கு சுமார் 52 லட்சம் ரூபாய் வாடகையில் லண்டனின் முக்கிய பகுதியில் உள்ள அடுக்குமாடி வீட்டில் குடியேறியிருக்கும் பூனாவாலாவுக்கு சமீபத்தில் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் மாதம் அனைத்தும் முடிவுக்கு வந்து விடும் என்று நினைத்து தான் உழைத்துக்கொண்டிருந்த நேரத்தில், திடீரென இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து, தடுப்பூசியின் தேவையும் அதிகரித்தது.

அதேவேளையில், உலகம் முழுக்க தடுப்பூசி விநியோகம் செய்த என்னால், இந்தியாவில் உள்ள ஒரு சில நிறுவனங்கள் கொடுத்த அழுத்தத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை, தடுப்பூசி தயாரிப்பை வெளிநாட்டில் இருந்து மேற்கொள்ள முடிவெடுத்துள்ளேன் என்று அந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

இவரை, மிரட்டியவர்கள் யார் என்பது குறித்து தெரிவிக்க மறுத்த அவர், இந்தியாவில் இருந்தால் தனது உயிருக்கு கூட ஆபத்து ஏற்பட்டிருக்க கூடும் என்று மேலும் தெரிவித்தார்.

நாட்டின் பெருமையை பறைசாற்றும் விதமாக மிகப்பெரிய சவாலான பணியை மேற்கொண்டு வரும் எனக்கும் என் நிறுவனத்துக்கும் ஆதரவாகவோ பாராட்டாவோ ஆள் இல்லை, மாறாக என் மீது பழிசுமத்தி என்னை இழிவு படுத்துகின்றனர் என்று தனது ஆதங்கத்தை அந்த பேட்டியில் வெளிப்படுத்தியிருக்கிறார் சீரம் நிறுவன தலைவர் அதார் பூனாவாலா.

உலக சுகாதார அமைப்பு, பில் கேட்ஸ் பவுண்டேஷன், அஸ்ட்ராஜெனிகா என்று பல்வேறு நிறுவனங்கள் இவரை நம்பி தடுப்பூசி தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், இவர் இந்தியாவில் தொழில் நடத்த முடியாத அளவுக்கு மிரட்டல் வருகிறது என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தடுப்பூசி தயாரிக்க ஒப்பந்தம் அளித்த நிறுவனங்கள் வழங்கிய நிதி குறித்தும், அந்த நிதியை எவ்வாறு பயன்படுத்தினார் என்பது குறித்தும் இங்கிருக்கும் சிலர் கேள்வி எழுப்பி வருவதோடு, ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பில் இருக்கும் ஒருவர் அரசுக்கு தெரியாமல் கடைசி நிமிடத்தில் லண்டனுக்கு செல்ல முடிந்தது எப்படி என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், இவருக்கு மிரட்டல் விடுத்த முதல்வர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலாளிகள் குறித்தும், எதற்காக மிரட்டல் விடுத்தார்கள் என்பது குறித்தும் விரிவான விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.