சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று அதானி விவகாரம் எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், தான் அதானியை சந்திக்கவில்லை என மறுப்பு தெரிவித்தார். இதை ஏற்க மறுத்து பாமக அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது.
தமிழக சட்டப்பேரவையின் 2வது நாள் அமர்வு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய அமர்வின் கேள்வி நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
இந்த சூழலில் அதானி விவகாரத்தில் தமிழ்நாட்டின் பெயர் பேசப்படுவதாக அவையில் பா.ம.க. உறுப்பினர் ஜி.கே.மணி கேள்வி எழுப்பியதுடன், தமிழகத்தில் அதானி முதலீடு குறித்தும், முதல்வரின் சந்திப்பு குறித்தும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், “தமிழ்நாட்டில் அதானி நிறுவன முதலீடு குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. ஏற்கனவே நான் பலமுறை தெளிவுபடுத்தி விட்டேன். நான் அதானியை சந்திக்கவில்லை. அதானியும் என்னை சந்திக்கவில்லை. அதானி விவகாரத்தை அரசியலாக்கி வருவதால் நான் இந்த விளக்கத்தை அளிக்கிறேன்.
அதானி முதலீடு பற்றி பொதுவெளியில் வரும் தகவல் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே பதில் அளித்துள்ளார். அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும், நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென ‘இந்தியா’ கூட்டணி வலுயுறுத்துகிறது. பா.ஜ.க., பா.ம.க. இந்த கோரிக்கையை ஆதரிக்க தயாராக இருக்கிறதா என்பதை விளக்க வேண்டும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
முதலமைச்சர் ஸ்டாலின் மேலோடமான பதிலை ஏற்க மறுத்த ஜிகே மணி, அதானி விவகாரத்தில் முதல்-அமைச்சர் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை என்று கூறி சட்டசபையில் இருந்து பா.ம.க. எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.