அமெரிக்க முதலீட்டாளர்களின் 2000 கோடி ரூபாய் பணத்தை அதானி மற்றும் அந்நிறுவன அதிகாரிகள் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக வாரி வழங்கியதாக நியூயார்க் நீதிமன்றத்தில் கடந்த வியாழன் அன்று வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விவரம் வெளியாவதற்கு முன் தினமான புதன் கிழமை, மகாராஷ்டிரா தேர்தல் காரணமாக மும்பை பங்குச் சந்தை விடுமுறை அளிக்கப்பட்டது.
அதற்கு முன்னதாக செவ்வாய்க்கிழமையன்று அதானி குழும நிறுவனங்கள் தங்கள் வசம் வைத்திருந்த 16.27 லட்சம் பங்குகளை விற்பனை செய்ததாக பங்கு வர்த்தக தரவுகள் மூலம் தெரியவந்துள்ளதாக ‘தி மின்ட்’ நாளிதழ் வெளியிட்டிருக்கும் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
அதானி குழும நிறுவனங்கள் சுமார் 1.78 கோடி பங்குகளை தன் வசம் வைத்துள்ள நிலையில் சுமார் 8 சதவீத பங்குகளை கடந்த செவ்வாயன்று விற்றுள்ளது.
அமெரிக்க நீதிமன்ற வழக்கு குறித்த தகவல் வெளியானதை அடுத்து வியாழனன்று அதானி நிறுவன பங்குகள் 23 சதவீதம் அளவுக்கு சரிந்த நிலையில் இந்த சரிவுக்கு முன் லாப விலைக்கு தனது பங்குகளை விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
தற்போது அதானி நிறுவன பங்குகளின் விலை வீழ்ச்சி அடைந்திருக்கும் நிலையில் அதானி நிறுவனம் தன் வசம் வைத்திருந்த பங்குகளை விற்பனை செய்தது தற்செயலாக நடந்த விஷயமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.