மும்பை
தனது செயற்கைக் காலை விமான நிலையத்தில் ஒவ்வொரு முறையும் சோதனை இடுவதை தடுக்க மோடியிடம் நடிகை சுதா சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரபல நடனக் கலைஞரான சுதா சந்திரன் கடந்த 1981 ஆம் ஆண்டு திருச்சி அருகே ஒரு விபத்தில் சிக்கினார். இதையொட்டி அவருடைய வலது காலில் பாதி நீக்கப்பட்டு செயற்கைக் கால் பொருத்தப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு அவர் அந்த செயற்கை காலுடன் நடன நிகழ்ச்சிகள் நடத்திப் புகழ் பெற்றுள்ளார்.
அவருடைய கதை மயூரி என்னும் பெயரில் அவரே நடித்துப் பல மொழிகளில் வெளியாகிப் புகழ் பெற்றார். அதற்குப் பிறகு பல மொழிப் படங்களில் நடித்துப் புகழ் பெற்றதுடன் தற்போதும் திரைப்படம், சீரியல், என நடிப்பதுடன் உள்நாடு மற்றும் வெளிநாட்டு நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். சமீபத்தில் இவர் நடித்த நாகினி என்னும் சீரியல் மிகவும் பிரபலமானது.
சுதா சந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள விடியோ தகவலில், “விமான நிலைய அதிகாரிகளால் பாதுகாப்பு சோதனைகளுக்காக எப்போதும் எனது செயற்கை கால் அகற்றப்படுவது அவமானமாகவும் வேதனையாகவும் உள்ளது. செயற்கை காலை ஒவ்வொரு முறையும் அகற்றுவது வாட்டி வதைத்து வலியைக் கொடுக்கிறது.
நான் எனது செயற்கை காலுடனேயே பல நாடுகளிலும் நடனமாடி நாட்டை பெருமைப் படுத்துகிறேன். விமான நிலைய அதிகாரிகளிடம் செயற்கை காலை சோதனைக்காகக் காட்டவேண்டியிருக்கிறது. எங்களுக்கும் வயதானவர்களுக்கு இருப்பதைப்போல ஒரு அட்டைக் கொடுங்கள் எனப் பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.