லாஸ்ஏஞ்சல்ஸ்:

சினிமா உலகில் தலைசிறந்த விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது விழா இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.  விழாவின் முதல் நிகழ்ச்சியாக ரெட்கார்பட் நிகழ்ச்சி துவங்கியது. விழாவில் திரைப்பட நடிகர்கள் நடிகைகள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், பிரபல நடிகையான நடிகை நடாலி போர்ட்மென், ஆஸ்கர் விருதுக்கு பெண் இயக்குனர்கள் பெயர்களை பரிந்துரைக்கப்படாததற்கு நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தார்.  தான் அணிந்திருந்த உடையில், பெண் இயக்குனர்களின் பெயர்களை பொறித்து, அதன்மூலம்  எதிர்ப்பை பதிவு செய்தார்.

இந்த ஆண்டு 92வது ஆஸ்கர் விருது விழா நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற ஆஸ்கர் விருதுகளுக்கு  தேர்வு செய்யப்படும் சிறந்த இயக்குநர்களுக்கான பிரிவில் ஐந்தே ஐந்து  பெண் இயக்குநர்கள் பெயர்கள்தான்  பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களில் கேத்ரின் பிகிலோ என்ற இயக்குநர் மட்டுமே ஆஸ்கர் பரிசு பெற்றுள்ளார்.

இந்த நிலையில், பெண் இயக்குனர்களின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பிரபல நடிகை நடாலி போர்ட்மென்,  இயக்குநர் பிரிவில் பரிந்துரைக்கப்படாத பெண் இயக்குநர்களின் பெயர்களை தனது ஆடையில் எப்பிராய்டரி மூலம்  தைத்து அணிந்து வந்தார்.

நடாலி போர்ட்மெனின் இந்த நூதன எதிர்ப்பு தொடர்பான வீடியோ, புகைப்படங்கள்  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.