தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஐதராபாத்தில் பதுங்கியிருந்ததாகக் கூறப்படும் நடிகை கஸ்தூரியை தமிழக காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

இன்று அவரை சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ரகுபதி ராஜா முன்பு ஆஜர் படுத்தினர்.

சினிமா தயாரிப்பாளர் ஹரி என்பவர் உதவியுடன் ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் கஸ்தூரி தலைமறைவாக இருந்ததாக நீதிமன்றத்தில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

“நான் சிங்கிள் மதர். எனக்கு ஸ்பெஷல் சைல்ட் உள்ளார். அவரை நான் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். என்னை சொந்த ஜாமீனில் விட வேண்டும்” என நீதிபதி முன்பு நடிகை கஸ்தூரி வேண்டுகோள் வைத்தார்.

வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்த கஸ்தூரியை கைது செய்ய தனிப்படை காவல்துறையினர் அங்கு சென்றபோது கதவை நீண்ட நேரம் திறக்காமல் உள்ளே மறைந்திருந்ததாக தமிழக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

மேலும், ஐதராபாத் காவல்துறையினர் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்து விடுவோம் என தனிப்படையினர் கூறிய பின்னர் கஸ்தூரி கதவை திறந்து வெளியே வந்ததையடுத்து அவரை கைது செய்ததாகத் தெரிவித்தனர்.

தவிர, ஐதராபாத்தில் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே பதுங்கி இருந்த நடிகை கஸ்தூரி தயாரிப்பாளரின் செல்போன் எண்ணை பயன்படுத்தி மற்ற நபர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், செல்போன் எண்ணை வைத்து கஸ்தூரியை கைதுசெய்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து இம்மாதம் 29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவை அடுத்து புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அப்போது “அரசியல் அராஜகம் ஒழிக, அரசியல் நாடகம் எதிர்பார்த்தது தான்” என்று நீதிமன்றத்தில் இருந்து வாகனத்தில் ஏற்றும் போது ‘நீதி வெல்லட்டும்’ என நடிகை கஸ்தூரி கோஷம் எழுப்பினார்.