கட்டாக் :
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி எம்.பி.யாக இருப்பவர் அனுபவ் மொகந்தி.
இவருக்கும் ஒடியா சினிமா நடிகையான வர்ஷா பிரியதர்ஷினிக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இப்போது இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். கணவன் மீது நடிகை வர்ஷா, கட்டாக் நீதி மன்றத்தில் ‘’குடும்ப வன்முறை’’ வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், கணவர் மொகந்தி டெல்லி நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
கணவன் – மனைவி பிரிந்து வாழ்ந்தாலும், எம்.பி.க்கு சொந்தமாக கட்டாக்கில் உள்ள இல்லத்தில் தான் வர்ஷா வசித்து வருகிறார். எம்.பி.யின் தாயார் மற்றும் சகோதரிகளும் அந்த வீட்டில் தான் வசிக்கிறார்கள்.
இவர்களுக்கும், நடிகை வர்ஷாவுக்கும் சதா சண்டை தான். இரு தரப்பும் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் நடிகை வர்ஷாவுக்கு நேற்று மர்ம கடிதம் ஒன்று வந்துள்ளது.
கையால் எழுதப்பட்ட அந்த கடிதத்தில் ஆபாசமான வார்த்தைகளால் வர்ஷாவை திட்டி, வாசகங்கள் இருந்தன. மேலும், கணவனின் வீட்டில் இருந்து காலி செய்யுமாறு வர்ஷாவை அந்த கடிதத்தில் மர்ம ஆசாமி மிரட்டியுள்ளான்.
இந்த கடிதம் குறித்து நடிகை வர்ஷா, புரிகாட் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகைக்கு ஆபாச கடிதம் எழுதிய ஆசாமியை தேடி வருகிறார்கள்.
– பா. பாரதி