இன்று: சூர்யா பிறந்ததினம் (1975)
பிரபல நடிகரான சிவகுமாரின் மகனாக இருந்தாலும், திரையுலக நிழல் அண்டாமல்தான் வளர்ந்தார் சூர்யா. எந்தவொரு திரையுலக முன்னனுபவமும் அவருக்கு இல்லை. அவரது ஆரம்பகால படங்களைப் பார்த்தால் இதை உணர முடியும்.
ஆனால், சித்திரமும் கைப்பழக்கம் என்பதைப்போல, தானே உணர்ந்து நடிப்பை பயின்று, இன்று சிறந்த நடிகர்களில் ஒருவராக பளி்ச்சிடுகிறார்.
மூன்று முறை ‘தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருது’, மூன்று முறை ‘ஃபிலிம்ஃபேர் விருது’, நான்கு முறை ‘விஜய் விருது’ என்று தனது நடிப்புத்திறமைக்கு அங்கீகாரமாக பல்வேறு விருதுகளை வென்றுள்ளாற் சூர்யா.
தன்னுடைய பள்ளிக் கல்வியை சென்னையில் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியிலும், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றார். பிறகு சென்னை லயோலா கல்லூரியில் வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
நடிகரென்ற தற்பெருமை இல்லாத தந்தை சிவகுமார் போலவே சூர்யாவும் வளர்ந்தார். . வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற சூர்யா, ஆடை தயாரிப்புத் தொழிற்சாலையில் மாதம் எட்டாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு சேர்ந்தார். ஆறு மாதங்கள் அங்கு பணியாற்றினார். அப்போது அவரை, இயக்குனர் வசந்த், தனது அடுத்தப் படத்திற்கு (நேருக்கு நேர்) படத்திற்கு ஒப்பந்தம் செய்தார்.
1997ல் வெளியான இப்படத்தில், நடிகர் விஜய்யுடன் இணைந்து சூர்யா நடித்தார். பிறகு ‘காதலே நிம்மதி’ (1998), ‘சந்திப்போமா’ (1999), ‘பெரியண்ணா’ (1999), ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ (1999), ‘உயிரிலே கலந்தது’ (2௦௦0) போன்ற படங்களில் நடித்த அவருக்கு, 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘ஃபிரண்ட்ஸ்’ திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, அதே ஆண்டில் வெளியான ‘நந்தா’ படமும் வெற்றிபெற்று, தமிழ்நாடு மாநில அரசின் விருதைப் பெற்றுத் தந்தது.
முன்னணி நட்சத்திரம் என்ற அந்தஸ்திற்கு உயர்ரந்த சூர்யா, தொடர்ந்து ‘உன்னை நினைத்து’ (2002), ‘ஸ்ரீ’ (2002), ‘மௌனம் பேசியதே’ (2002), ‘காக்க காக்க’ (2003), ‘பிதாமகன்’ (2003), ‘பேரழகன்’ (2004), ‘ஆய்த எழுத்து’ (2004), ‘மாயாவி’ (2005), ‘கஜினி’ (2005), ‘ஆறு’ (2005), ‘ஜூன் R’ (2006), ‘சில்லுனு ஒரு காதல்’ (2006), ‘வேல்’ (2007), ‘வாரணம் ஆயிரம்’ (2008), ‘அயன்’ (2009), ‘ஆதவன்’ (2009), ‘சிங்கம்’ (2010), ‘ரத்த சரித்திரம்’ (2010), ‘ஏழாம் அறிவு’ (2011), ‘மாற்றான்’ (2012) போன்ற படங்களில் நடித்து, பெரும் ஹீரோக்களின் பட்டியலில் இடத்தைப் பிடித்தார்.
‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘உயிரிலே கலந்தது’, ‘காக்க காக்க’, ‘பேரழகன்’, ‘மாயாவி’, ‘ஜூன் ஆர்’ மற்றும் ‘சில்லுனு ஒரு காதல்’ போன்ற படங்களில் நடிகை ஜோதிகாவுடன் இணைந்து நடித்தார் சூர்யா. இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. பல ஆண்டுகளாக அவர்கள் பெற்றோரின் சம்மதத்திற்காகக் காத்திருந்து அவர்கள் ஒப்புதலுடன் இருவரும் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி, 2006 ஆம் ஆண்டில் திருமண பந்தத்தில் இணைந்தனர். அவர்கள் இருவருக்கும் 2007ல் தியா என்ற மகளும், 2010ல் தேவ் என்ற மகனும் பிறந்தனர்.
சூர்யா, ‘அகரம் ஃபவுண்டேஷன்’ என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை நிறுவி, பொது நலனுக்காகவும், பாதியிலே பள்ளிப்படிப்பை விட்ட ஏழைக் குழந்தைகளின் கல்விக்காகவும் உதவி வருகிறார். காசநோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்.
விலங்குகளின் நலனிலும் அக்கறை செலுத்துகிறார் சூர்யா. இந்திய காடுகளில் புலிகள் இனம் அருகி வருவதை அடுத்து, புலிகளைக் காக்கப் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.