கொச்சி
பிரபல மலையாள நடிகர் முகேஷ் நடிகையை பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
கடந்த ஆகஸ்டில் கேரள திரைத்துறையில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழு தாக்கல் செய்த அறிக்கையை மாநில அரசு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, நடிகர்கள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எம்.எல்.ஏ.வான முகேஷும் பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஆவார். அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆயினும், எம்.எல்.ஏ. பதவியை முகேஷ் ராஜினாமா செய்ய தேவையில்லை என கேரளாவின் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தெரிவித்துள்ளது.,
தன் மீதான் குற்றச்சாட்டுகள் எல்லாம் அச்சுறுத்தலுக்கான முயற்சியின் ஒரு பகுதி ஆகும் என கூறி குற்றச்சாட்டுகளை முகேஷ் நிராகரித்து உள்ளார். , பாலியல் வன்கொடுமை வழக்கில் கொல்லம் தொகுதியின் எம்.எல்.ஏ. மற்றும் நடிகரான முகேஷ், எர்ணாகுளத்தில் சிறப்பு புலனாய்வு குழு முன் தன்னுடைய வழக்கறிஞருடன் சென்று இன்று ஆஜரானார்.
3 மணிநேர விசாரணைக்குப் பின்னர் அவர் இன்று அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு அவருடைய வாகனத்திலேயே மருத்துவ பரிசோதனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.