புதுடெல்லி: தன்மீது வேண்டுமென்றே எழுப்பப்பட்ட வருமான வரி ஏய்ப்பு குற்றச்சாட்டை தக்க ஆதாரங்களுடன் மறுத்துள்ளார் பஞ்சாப் நடிகர் தில்ஜித் டொசாஞ்ச்.
இந்திய தலைநகரில் நடைபெற்றுவரும் பிரமாண்டமான விவசாயிகளின் போராட்டத்திற்கு தில்ஜித் ஆதரவு தெரிவித்த நிலையில், அவர்மீது இந்த அவதூறு கிளப்பப்பட்டது. மேலும், பாரதீய ஜனதாவுக்கு நெருக்கமான கங்கனா ராவத்துடனும் அவருக்கு மோதல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வருமான வரி செலுத்துவதில், தான் சிறப்பாக பங்காற்றியதாக, மத்திய அரசின் நிதியமைச்சகம் தரப்பில் தனக்கு வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழையும் வெளியிட்டுள்ளார் தில்ஜித். அவருக்கு, அந்த சான்றிதழின் மூலம் பிளாட்டினம் அந்தஸ்து வழங்கப்பட்டது.
“நாள் முழுவதும் அந்த நபர்கள் பொய்ச் செய்திகளைப் பரப்பிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள், தங்களுடைய வேலையில் பரபரப்பாக இருந்துகொண்டு, வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். கடவுள் அனைத்தையும் பார்த்துக் கொண்டுள்ளார். இது நிச்சயம் அந்த நபர்களின் வேலைதான். அவர்கள் அதைத்தவிர என்ன செய்வார்கள்?” என்றுள்ளார் நடிகர் தில்ஜித்.