டெல்லி:

டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவியும், சமூக ஆர்வலர் மற்றும் அரசியல்வாதியுமான  ஷீலா ரஷீத்-ஐ தேசத்துரோக வழக்கில் கைது செய்ய நவம்பர் 5ந்தேதி வரை இடைக்கால தடை விதித்து டில்லி  நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஜம்முகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், அது தொடர்பாக இந்திய ராணுவத் தின்மீது அவதூறு பரப்பும் வகையில், போலி டிவிட் பதிவிட்டு வந்ததாக ஷீலா ரஷீத் மீது தேச த்துரோக வழக்கில்  நடவடிக்க எடுக்க வேண்டும், என்று  உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அலோக் ஸ்ரீவஸ்த்தவா என்பவர், டில்லி காவல் துறையில் புகார் அளித்திருந்தார்.

புகாரில்,  சமூக வலைதளங்களில் இந்திய அரசாங்கத்திற்கும், இந்திய ராணுவத்திற்கும் எதிராக இவர் கருத்து பதிவிட்டு வருவதாகவும், இவர் செய்து வருவது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 124-ஏ இன் கீழ் மிகப்பெரிய தேசத்துரோக குற்றம் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, ஷீலா ரஷீத்மீது, கடந்த (செப்டம்பர்)  3ஆம் தேதி  இந்திய தண்டனைச் சட்டம் 124-ஏ, 153, 153-ஏ, 504 மற்றும் 505 ஆகிய பிரிவுகளின் கீழ் டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த பட்டியாலா நீதிமன்ற கூடுதல் அமர்வு நீதிபதி பவன் குமார், ஷீலா ரஷீதை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். அதன்பிறகு இந்த வழக்கு தொடர்பான விசாரணை நவம்பர் 5 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையின்போது, ஆஜரான ரஷீத் வழக்கறிஞர், வழக்கு தொடர்பான விசாரணைக்கு  ஷீலா ரஷீத் முழு ஒத்துழைப்பு அளிப்பார் என்று கூறினார். மேலும், புகார் குறித்து விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு குழு, இது தொடர்பாக  ராணுவத்திடம் இருந்துஎந்தவொரு புகாரும் வரவில்லை என்று தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை நவம்பர் 5 ம்தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அதுவரை ஷீலா ரஷீத்தை கைது செய்யவும் இடைக்ககால தடை விதித்தார்.