சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, ஆம்னி பேருந்துகள் கட்டண உயர்வு இல்லாமல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார்.
நடப்பாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால் லட்சக்கணக்கானோர் சொந்த ஊர் மற்றும் சுற்றுலா ஸ்தலங்களுக்கு செல்வார்கள். இதையொட்டி வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. தீபாவளிக்கா 14,086 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான முன்பதிவு வேகமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், ரயில்கள் மற்றும் ஆம்னி பேருந்துகளிலும் ஏற்கனவே இருக்கைகள் நிறைவடைந்த நிலையில், ஆம்னி பேருந்து நிர்வாகத்தினர் தீபாவளியை யொட்டி மேலும் சிறப்பு பேருந்துகளை இயக்குகின்றனர். இதற்கான டிக்கெட் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டு உள்ளது. ரூ.1000 வசூலித்து வந்த கட்டம், தற்போது ரூ.2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், ஆம்னி பேருந்துகள் கட்டணம் உயர்த்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்ததுடன், கடந்த ஆண்டுகளை போலவே கட்டண உயர்வு இல்லாமல் ஆம்னி பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.
மேலும், அரசின் உத்தரவை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்து நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துடன், பொதுமக்கள் இதுகுறித்து புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்தார்.