சென்னை: 500 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, இன்றைய சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் துரைமுருகன், கேஎன். நேரு பதில் தெரிவித்தனர். மேலும் மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிங்கள் விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று (டிச.9) திங்கட்கிழமை தொடங்கியது. நேற்றைய கூட்டத் தொடரில் 10 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தி.மு.க அரசு பெரும்பான்மையுடன் மசோதாக்களை நிறைவேற்றினாலும் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க 3 மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதுபோல மதுரை டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த தீர்மானமும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் கேளிக்கை வரிச் சட்டம் 2017 மற்றும் தமிழ்நாடு வேளாண்மை உற்பத்தி விற்பனை (ஒழுங்குமுறை) இரண்டாவது திருத்த மசோதா 2024 ஆகியவற்றுக்கு அ.தி.மு.க ஆட்சேபம் தெரிவித்தது. தமிழ்நாடு தங்கும் விடுதிகள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இல்லங்கள் (ஒழுங்குமுறை) திருத்த மசோதா 2024 தொடர்பாக கட்சி சில கருத்துக்களை பதிவு செய்தது. உயர்கல்வி தொடர்பான நான்கு மசோதாக்கள் உட்பட ஏழு மசோதாக்களும் சபையில் தாக்கல் செய்யப்பட்டன.
பொது வெளியில் கச்சேரிகள், நாடகங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு கேளிக்கை வரி வசூலிக்க ஏதுவாக தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரிச் சட்டம் 2017-ல் திருத்தம் செய்வதற்கான மசோதாவை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்தார். 10 சதவீதம் கேளிக்கை வரி வசூலிக்க சட்ட திருத்தம் கொண்டு வரப்படுகிறது.
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொருள்கள் மற்றும் காரணங்கள் குறித்த அறிக்கையில், 1989-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் 27ன் பிரிவின் துணைப்பிரிவு (1) க்கு பதவிக்காலத்தை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது என்றார்.
இதைத்தொடர்ந்து, 2வது நாள் அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய அமர்வின் முதலாவதாக, மறைந்த முன்னாள் எ.பி. இரா மோகன், கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் கிருஷ்ணா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.