சென்னை
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை பாட்டிலுக்கு ரூ. 1 முதல் ரூ. 5 வரை அதிக விலைக்கு விற்ற 1000 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் 4000க்கும் மேல் உள்ளன. இவைகளில் பெரும்பாலான கடைகளில் ஒவ்வொரு பாட்டிலுக்கும் அதிக விலை வைத்து விற்பனை செய்வது, அதிக நேரம் திறந்து வைத்து மது விற்பனை செய்வது, மறைமுக பார்கள் நடத்துவது உள்ளிட்ட பல புகார்கள் நிர்வாகத்துக்கு வந்தன. இவர்றை ஒழுங்கு படுத்த டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரிகள் ஆய்வுக் குழுக் கூட்டம் ஒன்றை நிகழ்த்தியது.
இந்தக் கூட்டத்தில் அரசுக்கு இது போன்ற நடவடிக்கைகளால் ஒவ்வொரு மாதமும் ரூ.200 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுவதாக அதிகாரிகள் கூறினார்கள். ஆகவே இதை கண்காணிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டு அந்தக் குழு திடீர் வருகை தந்து ஆய்வு செய்ய தீர்மானிக்கப்பட்டது. ஆய்வின் போது முறைகேடுகள் கண்டுபிடிக்கபட்டால் ரூ.1 வரை கூடுதல் விலை விற்போருக்கு ரூ.1000 அபராதமும், ரூ. 10வரை அதிக விலைக்கு விற்போருக்கு பணியிட மாற்றமும் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதை ஒட்டி தமிழகம் எங்கும் நடைபெற்ற திடீர் சோதனைகளில் சுமார் 1000 ஊழியர்கள் பிடிபட்டு அவர்க்ள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 400 விற்பனையாளர்களும் 160 மேற்பார்வையாளர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தவிர 350 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைகள் மேலும் தொடரும் என தெரிய வந்துள்ளது.