மும்பை
பிரபல நடிகை தீபிகா படுகோனே அடையாள அட்டை இன்றி ஆசிட் விற்கப்படுவது குறித்து தனது நண்பர்கள் மூலம் ஆய்வு நடத்தி வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
பிரபல நடிகை தீபிகா படுகோனே சமீபத்தில் சபாக் என்னும் இந்திப் படத்தில் நடித்துள்ளார். இந்த மாதம் 10ஆம் தேதி வெளியான அந்த திரைப்படம் ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வால் என்னும் பெண்ணின் உண்மைக் கதை ஆகும். இதில் லட்சுமி அகர்வால் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சரியான அடையாள அட்டை அளிக்காதோருக்கும் 18 வயது குறைவானோருக்கும் ஆசிட் விற்கக்கூடாது என உள்ளது. ஆயினும் தன்னை விரும்பாத பெண்கள் மீது இளைஞர்கள் ஆசிட் வீசுவது அதிகரித்துள்ளது. இந்த படத்தில் நடித்ததில் இருந்து தீபிகா ஆசிட் விற்பனை குறித்து அறிந்துக் கொள்ள முற்பட்டுள்ளார்.
இது குறித்த ஆய்வை அவர் வீடியோவாக வெளியிட்டுள்ளார். தீபிகா தனது நண்பர்கள் சிலரை மெகானிக், குழாய்ப்பணியாளர், இல்லத்தரசி, குடிகாரர், கல்லூரி மாணவர் எனப் பல வேடங்களில் அனுப்பி உள்ளார். அவர் தனது காரில் அமர்ந்துக் கொண்டு அவர்களிடம் இயர்ஃபோன் மூலம் உரையாடி உள்ளார். அந்த வீடியோவில் காண்பதன்படி அனைவரும் மிகவும் வலுவான ஆசிட் தேவை என கடைக்காரர்களிடம் கேட்கின்றனர்.
கடைக்காரர்கள் அவர்களிடம் ஆசிட் எவ்வளவு வலுவானது என்பதை விவரிக்கிறார்களே தவிர யாரும் அடையாள அட்டையைக் கேட்கவில்லை. ஒரு சில கடைக்காரர்கள் இதை யார் முகத்திலாவது வீசப்போகிறீர்களா எனக் கேட்டார்களே தவிர அடையாள அட்டையை அவர்களும் கேட்கவில்லை. ஒரே ஒரு கடைக்காரர் மட்டும் அடையாள அட்டை கேட்டுள்ளார். அவரிடம் கல்லூரி மாணவராகச் சென்றவர் அடையாள அட்டை இல்லை என்றதும் ஆசிட் விற்க மறுத்துள்ளார். என்ன வற்புறுத்தியும் அவர் மட்டும் விற்கவில்லை.
ஒரே நாளில் தீபிகா ஏற்பாடு செய்த நடிகர்கள் 24 பாட்டில் ஆசிட் வாங்கி வந்துள்ளனர். இதை வீடியோவில் காட்டும் தீபிகா, ”இந்த தவற்றுக்குக் கடைக்காரர்களை மட்டும் குறை கூற முடியாது. நாமும் இது போல விற்பனை நடப்பதைத் தடுத்து உடனடியாக காவல்துறைக்குத் தகவல் அளிக்க வேண்டும். ஏனெனில் ஆசிட் விற்கவில்லை என்றால் அதை யாரும் வாங்க மாட்டார்கள்” எனக் கூறி முடிக்கிறார்.
தீபிகா படுகோனேவின் இந்த வீடியோ யு டியூபில் வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நமது வாசகர்களுக்காக இதோ அந்த வீடியோ.
[youtube https://www.youtube.com/watch?v=knAo0t0bSUA]