மோசடி மற்றும் பதிப்புரிமை மீறல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், புனே நீதிமன்ற நீதிபதியின் போலி கையொப்பத்துடன் கூடிய போலி உத்தரவைப் பயன்படுத்தி மும்பை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

புனேவைச் சேர்ந்த CTR மேனுபாக்ச்சரிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், தங்கள் காப்புரிமை பெற்ற வரைபடங்கள் மற்றும் வடிவமைப்புகளை சென்னையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தவறாகப் பயன்படுத்தியதைக் கண்டறிந்து 2022 இல் புகார் அளித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

CTR இன் சில ஊழியர்கள், குற்றம் சாட்டப்பட்ட நிறுவனத்தின் அதிகாரிகளுடன் இணைந்து, இந்த தனியுரிம வடிவமைப்புகளை அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்துவதில் ஈடுபட்டதாக விசாரணைகள் தெரிவிக்கின்றன.

2016 மற்றும் 2017 க்கு இடையில் CTR உற்பத்தியில் தரக் கட்டுப்பாட்டுத் துறையில் பணியாற்றிய ஹரிபாவ் கெம்டே என்பவர் வடிவமைப்பு திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

புனேவில் உள்ள விமண்டல் போலீசார் 2022 ஆம் ஆண்டு மோசடி மற்றும் பதிப்புரிமை மீறல் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த விசாரணையின் போது, ​​கெம்டே-வுக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பலரில் அவர் பெயரும் இடம்பெற்றது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஹரிபாவ் கெம்டே கைது செய்யப்படாமல் இருக்க மும்பை உயர் நீதிமன்றத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜாமீன் பெற்றார்.

இந்த நிலையில், “இந்த ஆண்டு ஜனவரியில் ஒரு ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டின் (முதல் வகுப்பு) போலி கையொப்பத்துடன் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 169 இன் கீழ் நீதிமன்ற உத்தரவை அவர் போலியாக உருவாக்கி, பிணை பெறுவதற்காக மும்பை உயர் நீதிமன்றத்தில் மோசடியான கையால் எழுதப்பட்ட உத்தரவை சமர்ப்பித்தார்,” என்று ஹரிபாவ் கெம்டே மீது இப்போது புதிதாக மற்றொரு எஃப்ஐஆர் போடப்பட்டுள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 169, சட்ட நடவடிக்கைகளை நியாயப்படுத்த போதுமான ஆதாரங்கள் இல்லாவிட்டால், குற்றம் சாட்டப்பட்டவரை விடுவிக்க அனுமதிக்கிறது.

நீதிபதியின் கையெழுத்து மோசடி தொடர்பாக காவல்துறை புதிதாக பதிவு செய்த எஃப்ஐஆருடன் மும்பை உயர்நீதிமன்றத்தை நாடிய CTR மேனுபாக்ச்சரிங் நிறுவனம், கெம்டேவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து மோசடி குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரியது.

CTR மேனுபாக்ச்சரிங் நிறுவனத்தின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதை அடுத்து மோசடி குறித்து காவல்துறை மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் ஜனவரி 17 அன்று உயர்நீதிமன்றம் ஹரிபாவ் கெம்டேவுக்கு முன்ஜாமீன் வழங்கிய நிலையில் அவர் தற்போது தலைமறைவாக உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.