பாலக்காடு: கேரளாவை உலுக்கிய சகோதரிகள் பாலியல் மற்றும் மர்ம மரணத்தில் கைதானவர்கள், ஆளும் இடதுசாரி கட்சி ஆதரவால் விடுதலை செய்யப்பட்டதாக சர்ச்சை வெடித்திருக்கிறது.
கேரளாவில் தற்போது இடதுசாரி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் பாலக்காடு அருகே வாளையார் அட்டப்பள்ளத்தை சேர்ந்த தம்பதி ஷாஜி, பாக்கியம்.
அவர்களுக்கு 11 மற்றும் 9 ஆகிய வயதில் 2 மகள்கள் இருந்தனர். இருவரும் பள்ளி மாணவிகள். அவர்களில் மூத்த மகள் ஜனவரி 13ம் தேதி வீட்டின் பின்புறம் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அக்கா இறந்த இடத்தில் சரியாக 50 நாட்கள் கழித்து, தங்கையும் தூக்கில் சடலமாக கண்டெடுக்கப் பட்டார்.
கேரள மாநிலம் முழுவதும் இந்த விவகாரம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அக்காள், தங்கை மர்ம மரணத்தால், பெற்றோரும், பொதுமக்களும் சிறுமிகளின் சாவில் மர்மம் உள்ளதாக கூறினர்.
பிரேத பரிசோதனையில் அக்காள், தங்கை இருவரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து சிறப்பு படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
விசாரணையில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக, அவர்களது உறவினர் மது, பக்கத்து வீட்டை சேர்ந்த ஷிபு மற்றும் பிரதீப் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் போதிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட வில்லை என்று கூறி பிரதீப் குமாரை நீதிமன்றம் விடுவித்தது.
கைது செய்யப்பட்டவர்கள் ஆளும் இடதுசாரி நிர்வாகிகள் என்பதால், அரசியல் நெருக்கடியால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. கைதானவர்கள் அனைரும் சிபிஎம் கட்சியின் நிர்வாகிகள். தவிர அக்கா மரணத்தின் போது முகமூடி அணிந்த நபர்கள் இருவரும் வீட்டில் இருந்து வெளியேறியதாக தங்கை போலீசில் வாக்குமூலம் கொடுத்திருந்தார்.
அதன்பிறகு, அவரும் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு, அதே பாணியில் தூக்கில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். ஆளும் கட்சியின் அதீத அழுத்தம் தான் குற்றவாளிகளை விடுவிக்க உதவியது என்ற குற்றச்சாட்டை மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன் முற்றிலுமாக மறுத்து இருக்கிறார்.
சட்டசபையில் அவர் கூறியிருப்பதாவது: இந்த விவகாரத்தில், பாதிக்கப் பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க, சிபிஐ விசாரணையையும் எதிர்கொள்ள மாநில அரசு தயாராக இருக்கிறது என்றார்.
இந்த சம்பவத்தில், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா, ஆளும் அரசு மீது குற்றச்சாட்டி இருந்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்காமல், குற்றவாளிகளை பாதுகாக்க முயல்கிறது என்று கூறியிருந்தார்.