டெல்லி: பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளின் கணக்குகள் பிப்ரவரி 28ந்தேதியுடன் காலாவதியாகிறது. அதற்கு முன்னதாக வங்கியை அணுகி, தேவையான மாற்றங்களை செய்துகொள்ள இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.
மோடி தலைமையிலான மத்தியஅரசு, அனைத்து பொதுத்துறை வங்கிகளையும் இணைத்து, 4 வங்கிகளாக மாற்றும் முயற்சியை செய்து வந்தது. உலக அளவில் பெரிய வங்கிகளாக உருவாக்கவும் பொதுத்துறை வங்கிகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு வருவதாக மத்தியஅரசு கூறி வருகிறது.
கடந்த 2019ம் ஆண்டு, முதன்முதலாக விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவை பேங்க் ஆப் பரோடாவுடன் இணைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து 2020ம் ஆண்டு ஏப்ரல் முதல் 10 பொதுத்துறை வங்கிகள், 4 வங்கிகளாக இணைக்கப்பட்டன. அதன்படி,
பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய 2 வங்கியும் இணைக்கப்பட்டது.
கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கியும் இணைக்கப்பட்டது.
யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன் ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கியும்,
இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கியும் இணைக்கப்பட்டது.
இந்த நிலையில், பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்ட தேனா வங்கி, விஜயா வங்கி, அலகாபாத் வங்கி, கார்ப்பரேசன் வங்கி, ஓரியண்டல் வங்கி, சிண்டிகேட் வங்கி, யுனைடெட் வங்கி ஆகிய வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள், பிப்ரவரி 28ந்தேதிக்குள், தங்கள் வங்கி கிளையை அணுகி, தங்களிடம் உள்ள செக்புக் மற்றும் வங்கி கணக்கு தொடர்புடைய பழைய வங்கி ஆவணங்களை மாற்றம் செய்துகொள்ளும்படி வாடிக்கையாளர்களை இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.
அத்துடன் முந்தைய வங்கிகளின் பெயரிலான காசோலைகளும் மார்ச் 1ந்தேதிக்கு பிறகு உபயோகப்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, வர்த்தக கணக்குகள், நடப்பு கணக்குகள், டிமேட்கணக்குகள் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக தேவையான மாற்றத்தை உடனே செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மார்ச் 1ந்தேதி முதல் இணைக்கப்பட்ட பெரிய வங்கிகளின் பெயரிலேயே, இணைக்கப்பட்ட வங்கிகளின் நடைமுறைகள், பரிவர்த்தனைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.