அகமதாபாத்-மும்பை புல்லட் ரயில் திட்ட தளத்தில் கட்டுமானப் பணிகளின் போது ஸ்லாப் நிறுவப் பயன்படுத்தப்படும் கிரேன் (section launching gantry) அதன் நிலையிலிருந்து நழுவி விழுந்ததால், பல ரயில்களின் இயக்கம் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் அகமதாபாத் அருகே உள்ள வத்வாவில் நடந்ததாகவும், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் தேசிய அதிவேக ரயில் கழகம் (NHSRCL) தெரிவித்துள்ளது.
“மார்ச் 23 ஆம் தேதி இரவு 11 மணியளவில், வத்வாவில் ஒரு பாலம் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட ‘கிரேன்’, கான்கிரீட் கற்றை நிறுவிய பின் பின்னோக்கி நகரும்போது வழுக்கி விழுந்தது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“இதனால் அருகிலுள்ள ரயில் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.” துறையின் மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர். எந்த உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை. “தற்போது கட்டப்பட்டு வரும் கட்டமைப்பிற்கு எந்த சேதமும் இல்லை” என்று அது விளக்கியது.
எந்த ஆபத்தும் இல்லை என்றாலும், பல ரயில்களின் இயக்கம் பாதிக்கப்பட்டது. குறைந்தது 25 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 15 ரயில்களின் இயக்கம் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது, மேலும் ஐந்து ரயில்களின் அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. ஆறு ரயில்களின் வழித்தடங்கள் திருப்பி விடப்பட்டுள்ளதாக அகமதாபாத் ரயில்வே பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இயந்திரம் சறுக்கியதால் சேதமடைந்த ரயில் பாதையில் போக்குவரத்தை சீராக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவி எண் வழங்கப்பட்டுள்ளது.