சென்னை:

ணம் பட்டுவாடா காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்று, அங்கு அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட புதிய நீதிக்கட்சி தலைவர்  ஏ.சி.சண்முகம் மனு தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு திமுக கூட்டணி சார்பில், திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த்தும், அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி  உள்பட ஏராளமான சுயேச்சைகளும் போட்டியிட்டனர்.

தேர்தல் பிரசாரத்தின்போது, வேலூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த்தின் நண்பர்கள் வீடு மற்றும் கல்லூரியில் நடந்த சோதனையில் ரூ.11 கோடி சிக்கியது. இதையடுத்து, அங்கு தேர்தலை ரத்து செய்வதாக  தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த நிலையில், ரத்து செய்யப்பட்ட வேலூர் தொகுதி தேர்தலை மே 19-ந்தேதி தமிழகத்தில் நடக்கும் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலோடு சேர்த்து நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வலியுறுத்தி வருகிறார்.

இது தொடர்பாக டில்லி சென்ற சண்முகம்,  தலைமை தேர்தல் ஆணையத்தில் வேலூர் தொகுதி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில், அங்கு பரப்புரை முடிந்து, தபால் வாக்குப்பதிவும் முடிந்துள்ளதால் உடனே தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஏ.சி.சண்முகம்,  எங்களது கோரிக்கையை பரிசீலிப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது என்று தெரிவித்தார்.