புதுடெல்லி: கொரோனாவால் வெளிநாட்டில் சிக்கித்தவித்த இந்தியர்கள் விமானம் மூலம் நாடு திரும்புவதற்கு பணம் எதையும் செலவழிக்கவில்லை என்றும், மாறாக, உள்நாட்டு சிக்கத் தவித்த புலம்பெயர் கூலித் தொழிலாளர்கள், தங்களுக்கான வழக்கமான போக்குவரத்து செலவைவிட கூடுதலாக செலவழித்து ஊர் திரும்ப வேண்டியுள்ளது என்ற வேதனையான தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கூறப்படுவதாவது; இதுவரை சமார் 1000 நபர்களுக்கும் மேலாக வெளிநாடுகளிலிருந்து இந்திய அரசால், சிறப்பு ஏர் இந்தியா விமானத்தின் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களெல்லாம் மாதத்திற்கு லட்சக்கணக்கில் ஊதியம் பெறுபவர்கள். ஆனால், இவர்களால் செலவு எதுவுமின்றி, விமானத்தில் பாதுகாப்பாக நாடு திரும்ப முடிந்தது.
வெளிநாட்டிலிருந்து கொரோனா காரணமாக சிக்கித் தவித்தவர்களை மீட்பதில் இந்திய மற்ற நாடுகளைவிட முந்திக்கொண்டு களமிறங்கியது.
சீனா, ஜப்பான், இத்தாலி மற்றும் ஈரான் உள்ளிட்ட பல நாடுகளில் சிக்கிய இந்தியர்கள், ஏர் இந்தியா விமானம் மூலம் மீட்கப்பட்டனர். இதற்கான செலவை வெளியுறவு அமைச்சகம் ஏற்றுக்கொண்டது. இது முன்பிருந்தே நடைபெற்றுவரும் வழக்கமான நடைமுறைதான் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், அன்றாட கூலிகளாக அவதிப்படும் மக்கள், ஒரு மாதத்திற்கும் மேலாக, எந்த சரியான ஏற்பாடுகளுமின்றி நீடிக்கும் ஊரடங்கால், இருக்குமிடத்திலும் இருக்க முடியாமல், பட்டினியால் சிக்கித் தவித்து, தங்களின் சொந்த ஊர்களுக்கே செல்ல விரும்பிய அன்றாட கூலி மக்கள் பட்ட அவதிகள் கொஞ்ச நஞ்சமல்ல.
உணவு, அவசரமான மருத்துவ வசதி, போக்குவரத்து என்று எதுவுமே கிடைக்காத சூழலில், பலரும் பலநூறு கிலோமீட்டர்களை கால்நடையாகவே கடக்கத் தொடங்கினர். சைக்கிள் வைத்திருந்த சிலர் அதில் பயணம் செய்யத் தொடங்கினர். இத்தகைய முயற்சிகளில் சிலர் தங்களுடைய உயிரையும் இழந்தனர்.
பலர், சரக்குப் போக்குவரத்து வாகனங்கள் மற்றும் ரயில்களில் மறைந்துகொண்டு உயிரைப் பணயம் வைத்து பயணித்தனர். டெல்லியிலிருந்து உத்‍திரப் பிரதேச மாநிலத்திற்கு, அந்த மாநில அரசுப் பேருந்துகளில் தொங்கிக் கொண்டும், பேருந்தின் மேல்புறத்தில் அமர்ந்துகொண்டும் திரும்பிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்களிடமிருந்து, அந்த தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து கொடுமையான வறுமையில் வாடிய சூழலிலும், அம்மாநிலத்தின் பாரதீய ஜனதா அரசு, கூடுதல் கட்டணம் வசூலித்து தனது கொடூர முகத்தைக் காட்டியது.

நாடெங்கிலும், சொல்லொண்ணா நரக வேதனையில், சில தன்னார்வ அமைப்புகளும், மனிதாபிமானம் நி‍றைந்த சில மனிதர்களும் அவ்வப்போது செய்த உதவிகளால், தங்களின் வயிறை சொற்பமாக நிரப்பிக் கொண்ட அவர்கள் எப்படியோ உயிரைத் தக்கவைத்து வருகின்றனர்.
பலர் ஒன்றுதிரண்டு, ஆங்காங்கே போராட்டங்களிலும் ஈடுபடுகின்றனர். இதை எப்போதும் மனிதாபிமானமற்ற முறையில் செயல்படும் சில வெகுஜன ஊடகங்கள் வேறுமாதிரியும் விமர்சித்தன.
இந்நிலையில், இவ்வளவு நாட்கள் கழித்து, தங்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து நிற்கும் அந்தப் புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்ப, சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்வது குறித்து இப்போதுதான் மோடியின் அரசு யோசிக்கிறது!
தொடக்கத்திலிருந்தே, உருப்படியான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாமல், கைத்தட்டுதல், விளக்கு ஏற்றுதல் மற்றும் விமானங்களிலிருந்து பூ தூவுதல், கடலில் கடற்படை கப்பல்கள் அணிவகுப்பு நடத்துதல் உள்ளிட்ட பயனற்ற மற்றும் அலங்கார நடவடிக்கைகளையே திட்டமிட்டு, இது எப்படிப்பட்ட ஒரு அரசு என்று காட்டிவரும் மத்திய அரசு, இனிமேலாவது மக்களுக்குத் தேவையானதை செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.