சென்னை: தமிழ்நாட்டில் ஏற்கனவே அவின் பால் விலை மற்றும் நெய் மற்றும் பால் பொருட்களை விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது ஆவின் நெய் விலை இரண்டாவது முறையாக  விலையையும் உயர்த்தி ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.  இந்த விலை உயர்வு இன்றுமுதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது பொதுமக்களிடையே அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழகஅரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின்,  பொதுமக்களுக்கு மலிவு விலையில் பால் பொருட்கள் கிடைக்கும் வகையில், மாநில அரசால் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், இநத் நிறுவனங்கள் பொதுமக்கள் வாழ்வாதாரத்தை கருத்தில்கொள்ளாமல்,  வருமானத்தை மட்டுமே கருத்தில்கொண்டு, பால், பால் பொருட்கள் உள்பட பல்வேறு தயாரிப்புகளை அவ்வப்போது உயர்த்தி பொதுமக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து வருகிறது.

ஆவின் மூலம், பால் மட்டுமின்றி, ஐஸ் கிரீம், தயிர், நெய், உள்பட இனிப்பு பொருட்கள், கேக்குகள் என பல பால் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  தரம் மற்றும் மலிவு விலை ஆகிய காரணமாக ஆவின் பொருட்களுக்கு  லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஆனால், ஆவின் நிறுவனமும், தமிழகஅரசும்., பொதுமக்களை கருத்தில் கொள்ளாமல் எந்தவித முன்னறிவிப்புமின்றி ஆவின் பொருட்களின் விலையை அவ்வப்போது உயர்த்தி வருகிறது. ஏற்கனவே அனைத்து வகையான பால் பொருட்கள் விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது 2வது முறையாக ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆவின்  நிர்வாக இயக்குனர் சுப்பையன்  வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், ஒரு கிலோ நெய்யின் விலை ரூ.50 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் நெய் விலை ரூ.580-லிருந்து ரூ.630 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், 5 லிட்டர் நெய்யின் விலை  2,900 ரூபாயில் இருந்து, 3,250 ரூபாயாகவும், 500 மில்லி லிட்டர் நெய்யின் விலை 290 ரூபாயில் இருந்து 315 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

200 மில்லி லிட்டரின் விலை ரூ.130-லிருந்து 145 ரூபாயகவும், 100 மில்லி லிட்டர் நெய் விலை ரூ.70ல் இருந்து ரூ.75 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.   நெய் மீதான விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வருவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆவின் பொருட்களின் விலை அவ்வப்போது உயர்ந்து வந்த நிலையில் நடப்பாண்டில் இரண்டாவது முறையாக நெய் விலை உயர்த்தப்பட்டு இருப்பது ஏழை எளிய மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

முன்னதாக, தமிழ்நாட்டில் சில்லறை விற்பனையில் விற்கப்படும் ஆரஞ்ச் நிற பால் பாக்கெட்டின் விலை, கடந்த நவம்பர் மாதம் லிட்டருக்கு ரூ 12 உயர்த்தப்பட்டது.  புதிய விலை மாற்றத்தின்படி, சில்லறை விற்பனையில்  அரைலிட்டர் அளவில் விற்கப்படும் நிறைகொழுப்பு கொண்ட ஆரஞ்ச் பால் பாக்கெட் விலை ரூ 24-இல் இருந்து 30 ஆக உயரும் என்றும், ஒரு லிட்டர் பால் பாக்கெட் விலை ரூ.60 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.