டெல்லி: டெல்லியின் புதிய முதலமைச்சராக கல்வித்துறை அமைச்சராக இருந்த அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று மாலை கவர்னரை சந்தித்து பதவி பிரமாணம் தொடர்பாக கடிதம் கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையாலும், பின்னர் சிபிஐயாலும் கைது செய்யப்பட்ட முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, உச்சநீதி மன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கியது. இதனால் சுமார் ஐந்தரை மாத சிறைவாசத்தை விட்டு வெளியே வந்த கெஜ்ரிவால், முதல்வர் அலுவலகத்துக்கும், அரசு கோப்புகளிலும் கையெழுத்திட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய முன் வந்துள்ளார். இன்று மாலை கவர்னரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுப்பதுடன், ஆம்ஆத்மி எம்எல்ஏக்களால் சட்டமன்ற கட்சி தலைவராக கல்வித்துறை அமைச்சர் அதிஷி தேர்வு செய்யப்பட்டது தொடர்பான கடிதத்தையும் அளிக்க உள்ளார்.
முன்னதாக இன்று முற்பகல் 11.30 மணி அளவில் கெஜ்ரிவால் இல்லத்தில் ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா, கைலாஷ் கெலாட், அதிஷி, துணை சபாநாயகர் ராக்கி பிர்லா மற்றும் சில எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை குறித்து விவாதித்த சட்டமன்ற கட்சி தலைவராக அதிஷி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
இதையடுத்து, இன்று மாலை 4 மணியளவில் அரவிந்த் கெஜ்ரிவால் துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அதிஷி, டெல்லியின் அடுத்த முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சிறிது நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.