டெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்துள்ள ஆம்ஆத்மி கட்சி, டெல்லி சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து உள்ளது.

18வது மக்களவை தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆம்ஆத்மி கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. இக்கட்சி  டெல்லி, பஞ்சாப், ஹரியானா, குஜராத் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் 22 இடங்களில் போட்டியிட்ட  நிலையில்,  பஞ்சாபில் மட்டும்  3 இடங்களில் வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் அதன் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்தியது. டெல்லியில் தனது கணக்கைத் திறக்கத் தவறிவிட்டது. பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியுடன் இணைந்து ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டும் தோல்வியை சந்தித்து.  இதற்கு காரணம் டெல்லி மதுபான கொள்கை முறைகேடு என்று கருதப்படுகிறது.  மதுபான கொள்கை குற்றச்சாட்டில்  டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்பட  ஆம்ஆத்மி கட்சியினர் பலர் கைதாகி உள்ள நிலையில், காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் ஆம்ஆத்மியின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்த  நிலையில், டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி யாருடனும் கூட்டணி வைக்காது தனித்து போட்டியிடும் என ஆம் ஆத்மி கட்சி கட்சித் தலைவர் கோபால் ராய் தெரிவித்து உள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த கோபால் ராய் பாராளுமன்ற தேர்தலுக்காக இந்தியா கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டோம். வரும் சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி இந்தியா கூட்டணியுடன் இணைந்து போட்டியிடாது. டெல்லி மக்களுடன் இணைந்து சட்டசபைத் தேர்தலை தனியாகச் சந்திப்போம் என தெரிவித்தார்.

 டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கடந்த இருமுறையும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த நிலையில்,  அடுத்த ஆண்டு (2025)  பிப்ரவரி மாதம்  தலைநகர் டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தல்  நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.