டில்லி:
ஆம்ஆத்மி கட்சி தலைமையிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட, ஆம் ஆத்மி மூத்த தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அல்கா லம்பா அக்கட்சியை விட்டு விலகி காங்கிரஸில் இணைந்தார்.
அல்கா லம்பா காங்கிரஸ் கட்சியின் நீண்டகால உறுப்பினர். கடந்த சில ஆண்டுகளாக ஆம்ஆத்மி கட்சியின் மீதான ஈர்ப்பு காரணமாக, அந்த கட்சியில் இணைந்து கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் சந்தினி சவுக் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.
கடந்த ஆண்டு டில்லி சட்டமன்றத்தில், ராஜீவ்காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தீர்மானத்தின் மீது சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடந்தபோது அதை எதிர்த்து வாக்களித்தார்.
இதனால் கட்சியின் மூத்த தலைவர்கள் அல்கா லம்பாவை கடுமையாக விமர்சித்தனர். இதனால் ஓரங்கட்டப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக அமைதி காத்து வந்தார். நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி பெரும் தோல்வியை சந்தித்த நிலையில், தோல்விக்கு பொறுப்பேற்று அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார். இதன் காரணமாக கட்சிக்கும் லம்பாவுக்கும் இடையேயான மனக்கசப்பு அதிகரித்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்த லம்பா, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து சோனியா முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இதுகுறித்து லம்பா, தனது டிவிட்டர் பக்கத்தில், “ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விடைபெறு கிறேன். அக்கட்சியுடனான 6 ஆண்டுகால பயணம் பல்வேறு விஷயங்களை எனக்கு கற்றுத் தந்தது. அனைவருக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.