பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நெல்லையின் வரலாற்று சிறப்புமிக்க நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆனி மாதம் நடைபெறும் ஆனிப்பெரும் தேர்த்திருவிழா முக்கியமானதாகும். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவிற்காக ஏற்கனவே விநாயகர் கொடி ஏற்றப்பட்டது. இதனையடுத்து நெல்லையப்பர் சன்னதியில் பிரதான கொடியேற்ற நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரதனைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
இன்று இரவு 8 மணிக்கு மேல் சுவாமி அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் வீதியுலா நடக்கிறது. 2ம் நாளான நாளை காலை சுவாமி அம்பாள் வெள்ளி சப்பர வீதியுலாவும் இரவு வெள்ளி கற்பக விருச்ச வாகனம், வெள்ளிகமல வாகனத்தில் வீதிஉலாவும் நடக்கிறது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை, இரவில் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதி உலா நடக்கிறது. 8ம் திருநாளான 13ம் தேதி மாலை 5 மணிக்கு சுவாமி நெல்லையப்பர் கங்களாநாதராக தங்க திருவோடு ஏந்தி தங்க சப்பரத்தில் வீதியுலா வருகிறார். முக்கிய திருவிழாவான தேரோட்டம் வருகிற 14ம் தேதி 9ம் திருநாளில் நடக்கிறது. அன்று காலை 8.30 மணிக்கு மேல் தேர்வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.
முன்னதாக அன்று அதிகாலை பிள்ளையார், முருகன் தேர்கள் வடம்பிடித்து இழுக்கப்படும். நெல்லையப்பர் தேர் உலாவைத் தொடர்ந்து அம்பாள் தேர் வடம் பிடித்து இழுக்கப்படும். இந்த தேர்கள் நிலையை அடைந்ததும். 5வது தேராக சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும்.வழக்கமாக தேரோட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அளிப்பது வழக்கம். இந்த முறை ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடக்க உள்ளதால் அதற்கான கேள்வி எழவில்லை. தேரோட்ட நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கூடுவார்கள் என்பதால் அன்றைய தினம் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மாற்றம் போன்ற ஏற்பாடுகளை செய்ய உள்ளனர்.