சண்டிகார்: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சி பஞ்சாபில் ஆட்சியை பிடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கு போட்டியிட்ட தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சிகளை ஓடஓட விரட்டி அடித்துள்ளது.

விவசாயிகள் போராட்டம் காரணமாக, அங்கு பாஜகவுக்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வந்தது. அதேவேளையில் உள்கட்சி பிரச்சினை காரணமாக, அங்கு முதல்வர் உள்பட பல காங்கிரசார் மாற்றப்பட்டது, காங்கிரஸ் கட்சி அங்கு சோபிக்க முடியாமல் போனது. இரு தேசிய கட்சிகளையும் ஆம்ஆம்மி கட்சி ஓரங்கட்டி இரண்டாவது மாநிலமாக பஞ்சாப் மாநிலத்தை கைப்பற்றுகிறது. அதுபோல, விவசாயிகள் பிரச்சினை காரணமாக, பாஜக நீண்டகால கூட்டாளியான எஸ்ஏடி (அகாலிதளம்)யுடன் பிரிந்து, பிஎல்சி மற்றும் எஸ்ஏடி (சன்யுக்த்) உடன் கூட்டணியில் போட்டியிட்டது. எஸ்ஏடி(அகாலிதளம்) பிஎஸ்பியுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டன.

ஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. அங்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என எண்ணத்தில் போட்டியிட்ட பஞ்சாப் மாநில காங்கிரஸ் முதல்வர் சரன்சித்சிங் சன்னி இரு தொகுதிகளில் போட்டியிட்டும், இரண்டிலுமே தோல்வியை தழுவும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அதுபோல, காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி அதிகார தோரணை காட்டிய முன்னாள் கிரிக்கெட் வீரரும், மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத்சிங்கும் தோல்வியை தழுவுகிறார். இவர் கிழக்கு அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.

அதே வேளையில், அங்குள்ள துரி தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மியின் முதல் மந்திரி வேட்பாளர்  பகவந்த் மான்முன்னிலை வகிக்கிறார். காலை 10 மணி வரையிலான நிலவரப்படி, அங்கு   ஆம் ஆத்மி 85 இடங்களிலும்,  காங்கிரஸ் 17 இடங்களிலும், அகாலிதளம் 10 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும் மற்றவை 1 இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன.

பாட்டியாலா தொகுதியில் போட்டிடும் காங்கிரசை விட்டு பிரிந்து பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள  முன்னாள் முதல்வர்  கேப்டன் அமரீந்தர் சிங் (பிஎல்சி கட்சி) பின்னடைவை சந்தித்து வருகிறார்.

லாம்பி தொகுதியில் போட்டியிடும் பிரகாஷ் சிங் பாதல் (சிரோமணி அகாலி தளம் ) பின்னடைவை சந்தித்துள்ளார். அதுபோல, ஜலாலாபாத் தொகுதியில் போட்டியிடும் சுக்பீர் சிங் பாதல் (சிரோமணி அகாலி தளம் தலைவர்) பின்னடைவை சந்தித்துள்ளார்.

பதான்கோட் தொகுதியில் போட்டியிடும் அஸ்வனி குமார் சர்மா (பாஜக) பின்னடைவை சந்தித்துள்ளார்.

84 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள  ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடிக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸ் கட்சியும், விவசாயிகள் உள்பட பல மக்கள் நலப்பிரச்சினைகளில், மக்களின் மீது உண்மையான அக்கறை காட்டாமல், அரசியல் நாடகத்தை தொடர்ந்து வந்த நிலையில், இரு கட்சிகளையும் பஞ்சாப் மக்கள் ஓடஓட விரட்டியடித்துள்ளனர்.