திருவண்ணாமலை: ஆடி மாத பவுர்ணமியை யொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் செய்ய உகந்த நேரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அக்னி ஸ்தலமாக உள்ளது. இங்கு தினசரி பல ஆயிரம் பேர் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். மேலும், பவுர்ணமி தினத்தன்று பல லட்சம் பக்தர்கள் வருகை தந்து அண்ணாமலையில் அமர்ந்துள்ள திருவண்ணாமலையை சுற்றி தங்களது பக்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள், திருவண்ணாமலையில் உள்ள மலையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள “அண்ணாமலை” என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து தங்களது வேண்டுகோள்களை பூர்த்தி செய்கின்றனர்.
இந்த நிலையில் ஆடி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதன்படி பவுர்ணமி வருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 6.05 மணிக்கு தொடங்கி மறுநாள் 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.48 மணிக்கு நிறைவடைகிறது.
பவுர்ணமி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி வருவதால் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் கிரிவலத்தையொட்டி, தமிழ்நாடு போக்குவரத்து துறை சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. வார விடுமுறை மற்றும் திருவண்ணாமலை கிரிவலம் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கம்தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
வருகிற 19/07/2024 (வெள்ளிக்கிழமை) 20/07/2024 (சனிக்கிழமை மற்றும் பௌர்ணமி) 21/07/2024 (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி. தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம். ஈரோடு. திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 19/07/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 260 பேருந்துகளும், 20/07/2024 (சனிக்கிழமை) 585 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 19/07/2024 வெள்ளிக் கிழமை அன்று 45 பேருந்துகளும் 20/07/2024 சனிக்கிழமை அன்று 45 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர். திருப்பூர். ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலைக்கு பேருந்து
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 50 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணா மலைக்கு 19/07/2024 அன்று இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, மதுரை, சேலம். கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி. தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 19/07/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 15 பேருந்துகளும் 20/07/2024 (சனிக்கிழமை) பௌர்ணமியை முன்னிட்டு அன்று 15 பேருந்துகளும் ஆக 30 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பௌர்ணமியை முன்னிட்டு சென்னை மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 30 சிறப்பு பேருந்துகள் 20/07/2024 (சனிக்கிழமை) அன்று இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 7,613 பயணிகளும் சனிக்கிழமை 4,354 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 8,142 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வேண்டுமாறு அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.