ராமேஸ்வரம்: கொரோனா பரவல் நடவடிக்கை காரணமாக, ராமேஸ்வரம் கடற்கரையில் தர்ப்பணம் கொடுக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு நாளை முதல் 9ஆம் தேதி வரை மற்றும் 12ஆம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கும், அக்னி தீர்த்த கடற்கரையில் தர்ப்பணம் செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் பகுதியில் கொரோனா பரவலைத் தடுப்பது குறித்து தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் தாசில்தார், சுகாதார அலுவலர், வருவாய் ஆய்வாளர்கள், லாட்ஜ் உரிமையாளர் சங்கத் தலைவர், வர்த்தக சங்கத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், புரோகிதர்கள் சங்க பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் ராமேஸ்வரம் பகுதியில் கொரோனா பரவலைத் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தாசில்தார் மார்ட்டின், நாளை முதல் 9ஆம் தேதி மாலை வரை, அக்னி தீர்த்த கடற்கரையில் எவ்வித தர்ப்பண பூஜையும் செய்யக் கூடாது. மேலும் 12ஆம் தேதி ஆடித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் நடக்க இருப்பதால் பக்தர்கள் கூட்டத்தைத் தவிர்க்க அன்றைய தினமும் அக்னி தீர்த்த கடற்கரையில் தர்ப்பண பூஜைக்கு அனுமதி கிடையாது.
அதேபோல 7, 8, 9, 12 ஆம் தேதிகளில் தங்கும் விடுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு அறை வழங்கக் கூடாது என்று லாட்ஜ் உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதை மீறி லாட்ஜ்களில் அனுமதித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், “கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டு பொருட்கள் வழங்க வேண்டும் என்று வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.