டில்லி,

பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

வருமான வரித்துறை சார்பில் நாட்டில் உள்ள அனைவருக்கும் ‘பான்’ கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு அட்டை வழங்கப்படுகிறது.

வருமான வரி செலுத்துவோர் மட்டுமல்லாது, வரி செலுத்தாதவர்களும் பான் அட்டை பெறலாம்.

ஆனால், மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்ற பிறகு அனைத்து வகையான பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் கார்டு தேவை என்று அறிவுறுத்தி வருகிறது.

வருமான வரி கட்டுபவர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று ஏற்கனவே மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கு ஆரம்பத்தில் சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. பின்னர் மத்தியஅரசின் விளக்கத்தை ஏற்று, உச்சநீதி மன்றம் அனுமதி அளித்தது.

அதைத்தொடர்ந்து தற்போது வருமான வரித்துறையிடம்  IT returns செய்பவர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசு இன்று வருமான வரி சட்டத்தில் திருத்தம் செய்து ஒரு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

அதில் பான் எண்ணுடன் ஆதார் இணைப்பது கட்டாயம் என உத்தரவிட்டுள்ளது. இதற்காக வருமான வரி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என கூறியுள்ளது.

வருகிற ஜூலை 1-ந்தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.

எனவே 1-ந்தேதி முதல் புதிதாக பான் கார்டுக்கு விண்ணப்பம் செய்வோர்களும், ஐடி ரிட்டன் தாக்கல் செய்பவர்களும்  ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயமாகிறது.