சென்னை: 100 யூனிட் இலவசம் மின்சாரம் பெற ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், ஆதார் இணைப்பதற்கான புதிய வலைதள லிங்கை-ஐ மின்சாரத்துறை வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த கடந்த செப்டம்பர் 10-ந்தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, முதல் 100 யூனிட் இலவச மின்சாரம் பெறுபவர்கள், குடிசை வீட்டில் வசிப்பர்கள், கைத்தறி நுகர்வோர்கள் என மானியம் பெறும் அனைவரும் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் போன்ற மானியம் பெறாத நிறுவனங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் மின்சார வாரியம் கடந்த மாதம் அறிவித்தது. பலருக்கு இலவச வாய்ப்பு பறிபோகும் நிலை உருவாகி உள்ளது.
இலவச மின்சாரத்தில் முறைகேட்டை தவிர்க்க ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு என்ணை இணைக்கும் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார். இப்போது இந்த திட்டத்துக்கு தமிழக அரசு அரசாணையும் கடந்த 13ந்தேதி வெளியிடப்பட்டது. இந்த நிலையில், தற்போது 100 யூனிட் இலவச மின்சார பெறுவர்கள், தங்களது ஆதார் எண்ணை மின்இணைப்பு எண்ணுடன் இணைப்பதற்கான இணையதள முகவரி வெளியிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்த வெளியிடப்பட்டள்ள அறிக்கையில், தமிழகத்தில் மின் நுகர்வோரின் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது தமிழகத்தில் மின்வாரியம் 11 லட்சம் குடிசை வீடுகளுக்கு முழுவதும், 2.22 கோடி வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும் 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகின்றது. இதில் பல மோசடிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு சிலர் விதிகளை மீறி கூடுதல் தளங்களை எழுப்பி ஒரே வீட்டிற்கு அதிக மின் இணைப்புகளை வாங்கியுள்ளனர். இப்படி பல காரணங்களால் தமிழக அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.
இதனை தடுப்பதற்காக ஆதார் எண்ணுடன் கூடிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படுவதால் ஒரே நபர் வேறு முகவரியில் கார்டு வாங்க முடியாது. மற்ற கார்டுகளிலும் உறுப்பினராக சேர முடியாது. ரேஷன் அட்டையை தொடர்ந்து இலவச மின்சாரத்தில் முறைகேடு தடுக்க ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேன்படி, 100 யூனிட் இலவசம் மின்சாரம் பெறுவதற்கு ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன் அடுத்த கட்டமாக, தற்போது மின் கணக்கு என்னுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான https://www.tnebltd.gov.in/adharupload/என்ற லிங்கை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. இது தற்காலிக சோதனை அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக மின் இணைப்புகளை கொண்டவர்களை கண்டுபிடிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.