சென்னை: சென்னை விமான நிலைய கூரையில் இருந்து ஒருவர் கிழே விழுந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹ
தீபாவளி பண்டிகயையொட்டி, சென்னை விமான நிலையம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. அற்கான பணியில் ஈடுபட்டு நபரே, கால் தவறி விமான நிலைய கூரையில் இருந்து கீழே விழுந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. உடனே அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வரும் 31ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. தீபஒளி திருநாளான தீபாவளி அன்று நிறுவனங்கள், வீடுகளில் விளக்குகள் ஏற்றி வழிபடுவது வழக்கம். அதன்படி பல நிறுவனங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. அதுபோல தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை விமான நிலையம் மற்றும் விமான நிலைய வளாகப் பகுதி முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்வதற்காக தனியார் ஒப்பந்ததாரரிடம் சென்னை விமான நிலைய நிர்வாகம் ஒப்பந்தப் பணியை விட்டுள்ளது.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் வண்ண விளக்குகள் அலங்காரம் செய்யும் பணிகள் கடந்த இரு நாட்களாக நடைபெற்று வருகிறது. தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று சென்னை விமான நிலையத்தின் டெர்மினல் 2 என்ற சென்னை சர்வதேச விமான முணையத்தின் இரண்டாவது தளத்தின் மேல் பகுதியில் வண்ண விளக்குகளை தொங்கவிடும் பணி செய்துகொண்டிருந்தபோது, பணியில் ஈடுபட்டிருந்த நபர், கால் தவறி கீழே விழுந்தார். சுமார் 40 அடி உயரத்தில் இருந்து அவர் விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில் அந்த நபர் பெயர் செல்வம் என்பதால், மரக்காணம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
உடனடியாக அவரை சக ஊழியர்கள், ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சென்னை விமான நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது போன்ற உயரமான கட்டடத்தில் பணியில் ஈடுபடும்போது, அந்த தொழிலாளர்கள் பாதுகாப்பு கவசமாக தலையில் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அதோடு உயரத்தில் அந்தரங்கத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் சேப்டி பெல்ட் அணிந்திருக்க வேண்டும் என்பது விதிமுறைகள். ஆனால், அதுபோன்ற சேப்டி பெல்ட், தலைக்கவசம் எதுவும் தொழிலாளி செல்வம் அணியவில்லை என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, பாதுகாப்பு ஏற்பாடுகளாக வலைகள் கட்டியிருக்கப்பட வேண்டும் என்றும் விதி முறைகள் உள்ளன. ஆனால், இது போன்ற எந்த விதிமுறையும் அமல்படுத்தாமல் சென்னை விமான நிலையத்தில் இதைப் போன்ற பணிகளைச் செய்ய எவ்வாறு அனுமதிக்கப்பட்டனர் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.