சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள காட்டுப்பகுதியில் அனாதையாக கிடந்த சூட்கேஸிற்குள் இளம்பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனையில், அந்த இளம்பெணுக்கு 18 வயது இருக்கலாம் என்றும், அவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு தலையில் அடித்துக் கொலைச் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த செப்டம்பர் 30ம் தேதி அன்று சேலம் சங்ககிரி அருகே கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சிறிய பாலத்தின் கீழ் முட்புதர்களில் பெரிய சூட்கேஸ் ஒன்று அனாதையாக கிடந்துள்ளது. அந்த ட்கேஸில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, அந்த பகுதியில் செல்வோர், இது குறித்து சங்ககரியை அடுத்த வைகுண்டம் பகுதி விஏஓவிடம் தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து விஏஓ உடனே சங்ககிரி போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், சங்ககிரி டிஎஸ்பி ராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கார்த்திகேனி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அந்த சூட்கேசை திறந்து பார்த்தனர். அதில் ஒரு பெட்ஷீட் போர்த்தப்பட்டு, கை, கால்களை மடக்கி சுருங்கிய நிலையில் ஒரு இளம்பெண்ணின் உடல் கிடந்தது. பெண்ணின் உடலை பார்த்த போலீசார், அவர் இறந்து சில நாட்கள் ஆகியிருக்கலாம் என சந்தேகித்தனர். உடனே அந்த உடலை உடற்கூறாய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து சேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
”சூட்கேஸில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணுக்கு வயது 18 இருக்கலாம் என்பதும், அந்த இளம்பெண்ணின் ஒவ்வொரு கையிலும் ஆறு விரல்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், அந்த பெண் கொலை செய்யப்படுவதற்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்றும், ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இக்கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் பிரேத பரிசோதனை நடத்திய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெண்ணின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால், பெண்ணின் உடல் உறுப்புகளை போலீசார் தனித்தனியாக எடுத்து வைத்துள்ளனர்.
அந்த பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு கட்டாயப்படுத்தியதில் கொலை நடைபெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும், அந்த பெண்ணின் உடலைப் போர்த்த பயன்படுத்திய போர்வை லாட்ஜில் எடுக்கப்பட்ட பெட்ஜீட் என கண்டுபிடிக்கப்பட்டது.
இறந்த பெண் நிர்வாணமாக இருந்ததால் , அந்த பெண் கடத்தி வரப்பட்டு, லாட்ஜில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சித்ரவதைக்குள்ளாகி கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே தனிப்படை போலீசார் சுங்கச்சாவடிகளில் உள்ள சிசிடிவி கேமராவை பார்த்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.