ண்டன்

சிகாகோவை சேர்ந்த ஒரு பெண் பாஸ்போர்ட் மற்றும் டிக்கட் எதுவும் இல்லாமல் லண்டன் சென்று அங்கு பிடிபட்டுள்ளார்.

சிகாகோவை சேர்ந்த மரிலின் ஹார்ட்மேன் (வயது 66) என்ற பெண் இதுவரை பல முறை பாஸ்போர்ட் மற்றும் டிக்கட் போன்ற எந்த ஆவணமும் இன்றி விமானப் பயணம் செய்ய முயன்றுள்ளார்.    அதில் சில முறை வெற்றியும் அடைந்துள்ளார்.   அவர் இதுவரை உள்நாட்டு விமானங்களில் இது போல செய்துள்ளார்.   சமீபத்தில் அவ்வாறு பயணம் செய்யும் போது பிடிபட்டு சிகாகோவில் அவர் வீட்டுக்காவலில் ஆறு மாதம் வைக்கப்பட்டுள்ளார்.

காவல் முடிந்ததும் அவரால் சும்மா இருக்க முடியவில்லை.   அதனால் விமானப் பணிப்பெண்கள் செல்லும் போது அவர்களுடன் மறைவாக தானும் விமான நிலையத்தினுள் சென்றுள்ளார்.   தனது முடியினால் தனது முகத்தை மறைத்துக் கொண்ட அவர்   லண்டன் செல்லும் விமானத்தில் சாமர்த்தியமாக ஏறி காலியான ஒரு இருக்கையில் அமர்ந்து பயணம் செய்துள்ளார்.

லண்டனை அடைந்ததும் அங்கு பரிசோதனையில் மாட்டிக் கொண்டுள்ளார்.    அதன் பிறகு விமான நிலைய அதிகாரிகள் அவரை விசாரித்ததில் பல தகவல்கள் வெளியாகி உள்ளன.   இது போல பயணம் செய்து அவர் வெளிநாட்டில் மாட்டிக் கொண்டது இதுவே முதல் முறையாக இருந்த போதிலும் உள்நாட்டில் பலமுறை மாட்டிக் கொண்டு கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவித்துள்ளார் என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.

மரிலினை கைது செய்த லண்டன் விமான நிலைய போலிசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.