கடலூர் மாவட்டம் வடலூர்-நெய்வேலி சாலையில் அரிசி மண்டி நடத்தி வருபவர் சண்முகம்.
திருட்டுக்கு பயந்து 15 லட்சம் ரூபாய் பணத்தை கடையில் இருந்த ஒரு அரிசி மூட்டையில் பதுக்கி வைத்திருந்துள்ளார்.
சம்பவத்தன்று, வேறு வேலையாக வெளியில் சென்ற சண்முகம், தன்னுடைய உறவினரான சீனிவாசன் என்பவரிடம் அரிசிக் கடையை சிறிது நேரம் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றுள்ளார்.
வேலை முடிந்து கடைக்கு திரும்பிய சண்முகம் பணம் வைத்திருந்த மூட்டை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து சீனிவாசனிடம் கேட்டபோது அந்த அரிசி மூட்டையை 1200 ரூபாய்க்கு ஒருவருக்கு விற்றுவிட்டதாகக் கூறி மேலும் பகீர் கிளப்பினார்.
இதையடுத்து சிசிடிவி கேமரா பதிவை பார்த்த சண்முகம் அந்த மூட்டையை மந்தாரக்குப்பம், மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் என்ற முதியவர் அந்த அரிசி மூட்டையை வாங்கி சென்றது தெரியவந்துள்ளது.
பதறியடித்துக் கொண்டு அங்கு சென்றபோது அரிசி மூட்டை பிரிக்கப்பட்டது கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார்.
தவிர, பூபாலன் வீட்டில் இல்லாத நிலையில் உடனடியாக பூபாலனின் மகளிடம் சண்முகம் நடந்ததை எல்லாம் விளக்கமாக கூறியுள்ளார்.
மூட்டைக்குள் கையை விட்டு தேடிய பொழுது உள்ளே ரூ. 10 லட்சம் மட்டுமே இருந்துள்ளது.
திருட்டுக்கு பயந்து அரிசி மூட்டையில் பதுக்கிய பணத்தில் ரூ. 5 லட்சத்தை இழந்த வியாபாரி சண்முகம் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அரிசி மூட்டைக்கும் பண மூட்டைக்கும் வித்தியாசம் தெரியாமல் விற்பனை செய்த தனது உறவினர் சீனிவாசன் மீது சண்முகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.