டெல்லி: பாரா ஒலிம்பிக்கில் இந்திய அணி ஒரு தங்கம் உள்பட 4 பதக்கம் பெற்றுள்ளது. இது அற்புதமான சாதனை என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் அவனி லெகரா தங்கமும், மணீஷ் நர்வால் வெள்ளியும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்றனர். தடகளத்தின் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் பிரீத்தி பால் வெண்கலம் வென்றார். இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
முதல் இரு நாளிலேயே 4 பதக்கங்கள் பெற்றுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு பாராட்டுக்குள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில், பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், துப்பாக்கிச் சுடுதல் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்ற அவனி லேகராவுக்கு வாழ்த்துகள். மேலும், பாரா ஒலிம்பிக்கில் 3 பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் என்ற சாதனையும் படைத்துள்ளார். அவனி லேகராவின் அர்ப்பணிப்பு இந்தியாவை பெருமைப்படுத்து கிறது என பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்ட மற்றொரு பதிவில், வெண்கலப் பதக்கம் வென்ற மோனா அகர்வாலுக்கு வாழ்த்துகள். மோனா அகர்வாலின் குறிப்பிடத்தக்க சாதனை அவரது அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. மோனாவால் இந்தியா பெருமை கொள்கிறது என குறிப்பிட்டுள்ளார். இதேபோல், துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளி வென்ற மணீஷ் நர்வாலுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.