சோனிபட்,
அரியானா மாநிலத்தில் முன்னாள் ராணுவ வீரரின் மனைவியின் ஒரிஜினில் ஆதார் அட்டை கையில் இல்லாததால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லட்சுமண தாஸ். ராணுவ வீரரான இவர் கார்கில் போரில் உயிரிழந்தார். இவரது மனைவி சகுந்தலா. இவர் கடந்த சில நாட்களாக நோய்வாய்ப்பட்டு இருந்தார்.
பல அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் அவரது உடல்நிலை சரியாகததால், ராணுவ அதிகாரிகளை சந்தித்து உதவி கோரினார். அதையடுத்து, உயர்அதிகாரிகள் அவரிடம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வலியுறுத்தினர்.
இதையடுத்து, பவன் குமார் தனது தாயை அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், அவர்கள் சகுந்தலாவை அனுமதிக்க, நோயாளியின் ஆதார் அட்டையை கேட்டுள்ளனர். அப்போது பவன்குமார், தனது மொபைலில் இருந்த, தாயின் ஆதார் அட்டையின் புகைப்படத்தை காட்டினார்.
ஆனால், மருத்துவமனை நிர்வாகமோ, அதை ஏற்க மறுத்து ஒரிஜினல் ஆதார்தான் தேவை என்று கூறி அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
அதைத்தொடர்ந்து வேறு மருத்துவமனைக்கு சகுலாந்தாவை அழைத்து செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பவன்குமார் புகார் செய்துள்ளார்.
ஆனால், மருத்துவமனை நிர்வாகமோ, சிகிச்சை அளிக்க ஆதார் அட்டை அவசியம் தான். ஆனால் அது ஆவணங்களை பராமரிக்க மட்டும்தான். ஆதார் அட்டை இல்லை என்றாலும் நாங்கள் சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவிப்பதில்லை என கூறியுள்ளனர்.
இது தற்போது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் ராணுவ வீரரின் மனைவிக்கே இந்த நிலையா என்று பொதுமக்கள் அதிர்ச்சி தெரிவித்து உள்ளனர்.