கேரளாவில் ஸ்கூட்டரை சாலையோரத்தில் நிறுத்தி செல்போனில் பேசியபோது ஸ்கூட்டரின் முன் பகுதியில் தீப்பிடித்ததால் முன்னால் நின்றுகொண்டிருந்த 6 வயது குழந்தைக்கு தீக்காயம் ஏற்பட்டது.
பாலக்காடு மாவட்டம் மன்னார்காட்டின் சாந்தபாடியில் தந்தையும் மகனும் சென்ற இருசக்கர வாகனம் தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
25ம் தேதி இரவு 11 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் போது ஹம்சகுட்டி தனது மகனுடன் ஜிம்மில் இருந்து வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது மொபைல் போனில் அழைப்பு வரவே ஸ்கூட்டரை சாலையோரம் நிறுத்தியுள்ளார்.
அதே நேரத்தில் என்ஜினில் இருந்து தீ வருவதைக் கண்ட ஹம்சகுட்டி, முன்னால் நின்றிருந்த தனது மகனை உடனே கீழே இறக்கிவிட்டார், பின்னர் அவரும் கீழே இறங்கினார்.
ஆனால் அவர்கள் சுதாரிப்பதற்குள் அவரது 6 வயது மகனின் பேண்ட் தீ பிடித்து காலில் தீக்காயம் ஏற்பட்டது. இருந்தபோதும் அவர்கள் இருவரும் மயிரிழையில் உயிர்பிழைத்தனர்.
பின்னர் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைத்தனர்.
சமீபகாலமாக எலக்ட்ரானிக் ஸ்கூட்டர்களில் தீ விபத்து ஏற்பட்டு வரும் நிலையில் இந்தமுறை சுசுகி அக்சஸ் 125 ஸ்கூட்டர் தீப்பிடித்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.